Published : 01 Sep 2024 01:01 PM
Last Updated : 01 Sep 2024 01:01 PM
புதுடெல்லி: குஜராத் மாநிலம் வதோதராவில் செப்டம்பர் 2 முதல் 4 வரை (திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை) மீண்டும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக ஆக.23-ம் தேதி பெய்த கனமழை காரணமாக அஜ்வா அணையில் இருந்து விஸ்வாமித்ரி நதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால், நகரின் பெரும்பாலான இடங்களில ஆறு முதல் எட்டு அடி வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்.2ம் தேதி வதோதராவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருகிலுள்ள பருச் மற்றும் நர்மதா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய குஜராத்தை ஒட்டிய சவுராஷ்டிராவில் அகமதாபாத் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்.4ம் தேதி ஆனந்த் மற்றும் பருச் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தெற்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாத பருவமழை செப்டம்பர் மாதத்திலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 12 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கிறது. சமீபத்திய பருவ மழையில் சிலநாட்களுக்குள்ளேயே குஜராத் அதன் ஆண்டு சராசரியை விட 105 சதவீதம் அதிகமாக பெற்றுவிட்டது.
சமீபத்தில் பெய்த கனமழையால் குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில்,வதோதராவில் வீட்டின் கூரை மீது ஒரு முதலை ஒன்று காணப்பட்டது. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளம் காரணமாக குஜராத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம் மாற்றப்பட்டுள்ளனர். குஜராத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினைத் தொடர்ந்து மாநில அரசு பல்வேறு பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதிகளில் பிடிபட்ட முதலைகள்: குஜராத் மாநிலம் வதோதராவில் ஆக.27 முதல் 29 வரை பெய்த கணமழை காரணமாக விஸ்வாமித்ரி நதியில் வெள்ளம் பாய்கிறது. இந்தநிலையில் நகரின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து 28 முதலைகள் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "விஸ்வாமித்ரி நதியில் 440 முதலைகள் வசிக்கின்றன. அஜ்வா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் வெள்ளத்தில் அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளன. முதலைகள் தவிர பாம்புகள், நாகப்பாம்புகள், முள்ளம்பன்றி, ஆமைகள் உள்ளிட்ட 75 விலங்குளும் மீட்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment