Published : 01 Sep 2024 06:55 AM
Last Updated : 01 Sep 2024 06:55 AM

லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி: லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வரும் வேலைவாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இவற்றில் பல போலியானவை என இந்திய இளைஞர்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நாடுகளுக்கு செல்லும் இந்திய இளைஞர்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இவ்வாறு இந்த நாடுகளில் மோசடி கும்பல்களிடம் சிக்கித் தவித்த 635 இந்தியர்களை மத்திய அரசு இதுவரை மீட்டு உள்ளது.

இந்நிலையில் லாவோஸ் நாட்டின் பொக்கியோ மாகாணத்தில் உள்ள தங்க முக்கோண சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இணைய மோசடி மையங்களில் சிக்கித் தவித்த 47 இந்தியர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து லாவோஸில் உள்ள இந்திய தூதகரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக லாவோஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைக்கு பிறகு 29 இந்தியர்கள் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் உதவி கோரி இந்திய தூதரகத்தை அணுகிய 18 பேரும்மீட்கப்பட்டனர்’’ என்று கூறப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடந்த மாதம் லாவோஸ் நாட்டில் மேற்கொண்ட பயணத்தில் இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு பிரதமரிடம் பேசியிருந்தார்.

லாவோஸ் வரும் இந்தியர்களிடம் இருந்து பாஸ்போர்ட் பறித்துக் கொள்ளப்படுவதால் அவர்களால் அந்நாட்டை விட்டு வெளியேற முடிவதில்லை. பின்னர் அவர்கள் பெண்களின் பெயரில் உருவாக்கப்படும் போலியான சமூக ஊடக கணக்குகள் மூலம்மோசடிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தினசரி இலக்குகள் வழங்கப்பட்டு, அதனை எட்டாதவர்கள் தண்டிக்கப்படுகின்றனர்.

அங்கிருந்து மீட்கப்பட்ட இந்தியர் ஒருவர் கூறுகையில், “டேட்டிங் செயலிகளில் பெண்களை போல் ‘சாட்' செய்து ஆண்களை மயக்கியும் அவர்களை நம்ப வைத்தும் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்யச் சொல்கின்றனர். இதுபோல் இந்தியாவில் ஆண்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்’’ என்றார். லாவோஸில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டில் இருந்து கடந்த மாதம் 13 இந்தியர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x