Published : 01 Sep 2024 08:02 AM
Last Updated : 01 Sep 2024 08:02 AM
பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியை காங்கிரஸ் மேலிடம் வழங்கினால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன் என அம்மாநில உள்துறை அமைச் சர் பரமேஷ்வரா தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தரா மையா தனது மனைவி பார்வதிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா நேற்று பெங்களூருவில் பொதுப் பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் பரமேஷ்வரா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியுடன் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினேன். முதல்வர் சித்தராமையா மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதில் என்ன முடிவு வரும்என யாருக்கும் தெரியாது. இருப்பினும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தோம்.
சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு எதிரான நடவடிக்கைகளை காங்கிரஸார் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்க்கிறோம். சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகுவது குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்கும்.
அதேநேரம் மேலிடத் தலைவர்கள் முதல்வர் பதவியை எனக்கு வழங்கினால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன். கர்நாடகாவில் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் முதல்வராக வர வேண்டும் என்பது எங்களின் நீண்டகால கோரிக்கை. அதனை தக்க சமயத்தில் வலியு றுத்துவோம்'' என்றார்.
முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக பாஜகவினரும் மஜதவினரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேவேளையில் சித்தராமையாவுக்கு எதிராக அமைச்சர்கள் பரமேஷ்வரா, சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா ஆகியோர் கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்அவருக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பட்டியல் வகுப்பை சேர்ந்த பரமேஷ்வரா, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தார். 2013-ம் ஆண்டு அவர் காங்கிரஸ்மாநில தலைவராக இருந்தபோது, காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அப்போது பரமேஷ்வரா தேர்தலில் தோல்வி அடைந்ததால், முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT