Published : 30 Aug 2024 05:08 PM
Last Updated : 30 Aug 2024 05:08 PM

“பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை சகாப்தம் முடிந்துவிட்டது” - வெளியுறவு அமைச்சர் திட்டவட்டம்

புதுடெல்லி: பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்ற சகாப்தம் முடிந்துவிட்டதாக தான் நினைப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

'மூலோபாய புதிர்கள்: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைத்தல்' என்ற தூதர் ராஜீவ் சிக்ரியின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அப்போது அவர், "பாகிஸ்தானுடனான இடைவிடாத பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானின் செயல்களுக்கு விளைவுகள் உண்டு. ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை, சட்டப்பிரிவு 370 நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதில் மாற்றமில்லை. எனவே, பாகிஸ்தானுடன் என்ன வகையான உறவைப் பற்றி சிந்திக்கலாம் என்பதுதான் இன்றைய பிரச்சினை.

பாகிஸ்தான் உடனான உறவைப் பொறுத்தவரை, தற்போதுள்ள நிலையை தொடர்வதில் இந்தியா திருப்தி அடையலாம் என்று ராஜீவ் சிக்ரி தனது புத்தகத்தில் பரிந்துரைத்துள்ளார். சில நேரங்களில் ஆம் என்றும், சில நேரங்களில் இல்லை என்றும் இதற்கு பதில் சொல்லலாம். அமைதியாக இருப்பவர்கள் அல்ல நாங்கள். நிகழ்வுகள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம்.

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தமட்டில், இந்திய - ஆப்கனிய மக்களுக்கு இடையேயான உறவு வலுவானதாக இருக்கிறது. ஆப்கன் சமூகத்தின் மீது இந்தியாவுக்கு நல்லெண்ணம் உள்ளது. ஆனால் நாம் ஆப்கானிஸ்தான் எனும்போது, அங்குள்ள ​​​​அரசாங்கத்தின் அடிப்படைகள் குறித்து நாம் மறந்துவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆப்னில் சர்வதேச உறவுகளுக்கு மதிப்பிருக்கிறது. இன்று நாம் நமது ஆப்கானிய கொள்கையை மறுபரிசீலனை செய்யும்போது, ​நமது நலன்கள் பற்றி நாங்கள் மிகவும் தெளிவாகக் கவனிக்கிறோம். நமக்கு முன்னால் இருக்கும் 'பரம்பரை ஞானத்தால்' நாம் குழப்பமடையவில்லை. அமெரிக்க படைகள் இருக்கும் ஆப்கானிஸ்தான், அமெரிக்க படைகள் இல்லாத ஆப்கானிஸ்தானில் இருந்து மிகவும் வித்தியாசமானது. இதற்காக நாம் அந்நாட்டை பாராட்ட வேண்டும்.

வங்கதேசத்தைப் பொறுத்தவரை, அந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, அந்த நாட்டுடனான நமது உறவு மேலும் கீழுமாகவே இருந்துள்ளது. தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேநேரத்தில், பரஸ்பர நலன்களை கண்டறிவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இதற்காக தற்போதுள்ள அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும். மியான்மருடான உறவைப் பொறுத்தவரை, ஒரே நேரத்தில் அது நெருக்கமாகவும் தொலைவாகவும் உள்ளது. அங்குள்ள அரசாங்கம் மற்றும் பிற சக்திகளுக்கு இடையே ஒரு சமநிலையைக் கண்டறிய வேண்டும். ஏனெனில் அதுதான் உண்மை" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x