Published : 30 Aug 2024 05:46 AM
Last Updated : 30 Aug 2024 05:46 AM
ஹைதராபாத்: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா நிபந்தனை ஜாமினில் சமீபத்தில் வெளியே வந்தார். இதுகுறித்து பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில், தெலங்கானா மாநில முதல்வர்ரேவந்த் ரெட்டியும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து ரேவந்த் ரெட்டி கூறுகையில், ”நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் பி.ஆர்.எஸ். கட்சி ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு செயல்பட்டது. இதனை நாங்கள் பல மேடைகளில் பேசியிருந்தோம். இதற்கு சந்திரசேகர ராவ் உட்பட பலர் மறுப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது கவிதா ஜாமீனில் வெளியே வந்தது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
ஏனெனில், இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவிற்கு 15 மாதம் கழித்து தான்ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் கவிதாவிற்கு வெறும் 5 மாதத்திலேயே நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளதே இதற்கு சான்றாகும்” என்றார்.
தற்போது ரேவந்த் ரெட்டியின்இந்த கருத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்து உள்ளது. “தங்களின் தனிப்பட்ட கருத்திற்கு நீதிமன்றத்தை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம். நாங்கள் எப்படி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற விஷயங்களில் தலையிடாமல் உள்ளோமோ அதே போன்று நீங்களும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
பொறுப்புள்ள ஒரு முதல்வர் பதவியில் இருப்பவர் பேசும் பேச்சாக இல்லை. நாங்கள் தீர்ப்பு அளிக்கும் போது கட்சிகளை கேட்டுதான் தீர்ப்பளிக்க வேண்டுமா? நாங்கள் எங்கள் மனசாட்சி படியும், சட்டப்படியும்தான் தீர்ப்பளிக்கிறோம்” என்று நீதிபதிகள் பிகே. மிஸ்ரா, கே.வி. விசுவநாதன் ஆகியோர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT