Published : 10 Jun 2018 02:41 PM
Last Updated : 10 Jun 2018 02:41 PM
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு பங்களாவை காலி செய்த முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வீட்டில் இருந்த விலை உயர்ந்த ஏசி, பாத்டப், தண்ணீர் குழாய், உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்சென்று சேதப்படுத்திவிட்டார் என்று பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர்களான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் ஆகியோர் நீண்ட ஆண்டுகளாக அரசு பங்களாவை ஆக்கிரமித்துத் தங்கி இருந்தனர். இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் உடனடியாக அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், ராஜ்நாத் சிங், திவாரி ஆகியோர் அரசு பங்களாவை கடந்த வாரம் காலி செய்து அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் குடியேறினார்கள்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தான் தங்கி இருந்த அரசு பங்களாவை காலி செய்தபோது, அங்கிருந்த விலை உயர்ந்த குளியல் தொட்டி, தண்ணீர் வரும் விலை உயர்ந்த டேப், அழகுக்காக வைக்கப்பட்டிருந்த செடிகள், விளக்குகள் போன்றவற்றை எடுத்துச் சென்றுவிட்டதாக பாஜக குற்றம்சாட்டுகிறது.
இது குறித்து மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்வதந்திரா தேவ் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
லக்னோ நகரில் உள்ள விக்ரமாதித்யா மார்கில் அகிலேஷ் யாதவின் அரசு பங்களா அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை காலி செய்தபோது அகிலேஷ் யாதவ் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள், குளிக்கும் தொட்டி, ஷவர், தண்ணீர் வரும் குழாய், விலை உயர்ந்த விளக்குகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிட்டார். சமையல் கூடம், சைக்கிள் ஓட்டும் இடம், பூங்கா ஆகியவற்றையும், சேதப்படுத்தி இ ருக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஒருவரின் செயல் என்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. சிறுவர்கள் ஏதாவது கிடைக்காவிட்டால், கையில் இருப்பதைப் போட்டு உடைப்பார்கள், அதுபோல் அகிலேஷ் செய்துள்ளார். அரசு பங்களாவில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அரசின் சொத்துக்கள், அவற்றுக்கு எந்தவிதமான சேதமும் வராமல்பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கும், முன்னாள் முதல்வருக்கும் இருக்கிறது. அகிலேஷ்யாதவின் செயல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாகும். இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பாஜகவின் குற்றச்சாட்டை சமாஜ் கட்சி ஏற்க மறுத்துவிட்டது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் சுனில் யாதவ் நிருபர்கள் கூறுகையில், அகிலேஷ் யாதவ் வீட்டைக் காலி செய்தபின், வீட்டில் இருக்கும் பொருட்கள்பலவற்றை அகற்றக்கோரி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் அடைந்த தோல்வியால், ஆற்றாமையால், அகிலேஷ்யாதவ் மீது பாஜக சேற்றை வாரித் தூற்றுகிறது எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT