Published : 29 Aug 2024 06:09 PM
Last Updated : 29 Aug 2024 06:09 PM
வதோதரா: குஜராத் மாநிலத்தில் கனமழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தில் தனது 50 லட்ச ரூபாய் கார் மூழ்கியதாக வதோதராவை சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். தனது வேதனையை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
குஜராத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 18,000 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வதோதராவில் மட்டும் சுமார் 12,000 மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், “எதுவும் மிச்சமில்லை. என்னிடம் இருந்த மூன்று கார்களும் நீரில் மூழ்கிவிட்டன. எனது குடியிருப்புக்கு வெளியேற 7 அடி அளவுக்கு நீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீர் வடிந்தால் மட்டுமே எங்களுக்கு உதவி கிடைக்கும்” என ரெட்டிட் தளத்தில் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள பதிவில் Audi ஏ6, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஃபோர்ட் எக்கோஸ்போர்ட் கார்கள் இடம்பெற்றுள்ளன. இதில் Audi ஏ6 2024 மாடல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.64.41 லட்சம் ஆகும்.
அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் மற்ற பயனர்கள் கமெண்ட் செய்துள்ளனர். ‘நகராட்சி நிர்வாகம் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். உங்களது கார் பாழானதை கண்டு மனம் கனக்கிறது’, ‘வருமான வரி, கார்களுக்கான அதீத ஜிஎஸ்டி, சாலை வரி, சுங்க கட்டணம் மற்றும் பல கட்டணங்களை செலுத்தும் நமக்கு கிடைப்பது என்னவோ இதுதான்’, ‘இன்ஜினை ஸ்டார்ட் செய்ய வேண்டாம். பெட்ரோல் கார்கள் என்றால் சர்வீஸ் சென்டரில் கொடுத்து பழுது பார்க்கலாம்’ என பயனர்கள் அவரது பதிவுக்கு பதில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT