Published : 29 Aug 2024 06:05 PM
Last Updated : 29 Aug 2024 06:05 PM
கொல்கத்தா: ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை கொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்களை ஒருபோதும் மிரட்டவில்லை என்று பாஜக குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களை மிரட்டுவதாக கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும், மருத்துவர்களின் இயக்கங்கள் உண்மையானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை பேரணி ஒன்றில் பேசும்போது, 21 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவமனைகளின் இளநிலை மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களின் எதிர்கால நலன்கள் கருதி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் இந்த பேச்சை மேற்கொள்காட்டி,“பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், பாதுகாப்பான பணிச்சூழல் கேட்டும் போராடி வரும் இளநிலை மருத்துவர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மிரட்டுகிறார்” என்று பாஜக மாநிலத் தலைவர் குற்றம்சாட்டினார். இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக மம்தா பானர்ஜி கூறுகையில், “பாஜகவின் குற்றச்சாட்டு தீய நோக்கம் கொண்ட தவறான பிரச்சாரம். மருத்துவ மாணவர்கள் மற்றும் இளநிலை மருத்துவர்கள் குறித்து ஒரு வார்த்தைகூட கூறவில்லை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் மம்தா, “நேற்று நான், எங்களின் மாணவர்களின் நிகழ்ச்சியில் பேசியது தொடர்பாக அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்ட தவறான பிரச்சாரம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டேன். இங்கே நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன், (மருத்துவம் உள்ளிட்ட பிற) மாணவர்கள் அல்லது அவர்களின் இயக்கங்களுக்கு எதிராக நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர்களின் இயக்கங்களை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். அவர்களின் இயக்கங்கள் உண்மையானவை. நான் அவர்களை மிரட்டவில்லை. சிலர் நான் அவ்வாறு செய்ததாக குற்றம்சாட்டுகிறார்கள். அது முற்றிலும் பொய்யானது.
நான் பாஜகவுக்கு எதிராக பேசினேன். ஏனெனில், இந்திய அரசின் உதவியுடன் அவர்கள் நமது மாநிலத்தின் ஜனநாயகத்தை அச்சுறுத்தி, இங்கு அராஜகத்தை உருவாக்க முயற்சிப்பதால் நான் அவர்களுக்கு எதிராக பேசினேன். மத்திய அரசின் உதவியுன் அவர்கள் சட்டவிரோத போக்கை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நான் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தேன்.
எனது உரையில் நேற்று நான் பயன்படுத்திய ‘உடுத்திக்கொள்ளுங்கள்’ (phonsh kara) என்ற சொற்சொடர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பயன்படுத்தியது என்பதையும் நான் தெளிவுபடுத்துகிறேன். அம்மாபெரும் துறவி, அவ்வப்போது குரல் உயர்த்த வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார். குற்றம் மற்றும் குற்ற நடவடிக்கைகள் நடக்கும்போது நாம் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். அந்த வகையில் எனது பேச்சு நேரடியாக ராமகிருஷ்ணர் சொன்னைத் குறிப்பிடுவதாக இருந்தது" என்று மம்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மம்தா பானர்ஜி மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு வைத்திருந்த பாஜகவின் அமித் மாளவியா, இந்தப் புதிய பதிவுக்கும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்து மம்தாவுக்கு எதிராக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது பதிவில், "மேற்கு வங்க முதல்வர் தனது பேச்சில் வழக்குகள் பதியப்பட்டால் இளநிலை மருத்துவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அவர்களால் பாஸ்போர்ட், விசா பெற முடியாது என்றார். இதைத்தான் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இப்போது இந்த தெளிவுபடுத்தலின் மூலம் மம்தா பானர்ஜி மேலும் தன்னைத் தானே படுகுழிக்குள் தள்ளிக்கொண்டார்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தொடங்கப்பட்ட நாள் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களை எனது அரசாங்கம் சகித்துக்கொள்ளாது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, சட்டப்பேரவையில் 10 நாட்களில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளிக்காவிட்டால், ஆளுநர் மாளிகை முன்பு அமர்ந்து போராடுவோம்" என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT