Published : 29 Aug 2024 02:03 PM
Last Updated : 29 Aug 2024 02:03 PM
புதுடெல்லி: ஆறு மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பெயரில் தன் மீது பதியப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கு, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யுமாறு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக பிரமுகருமான பிரிஜ் பூஷணின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீனா பன்சால், பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் நடவடிக்கைகளை முழுமைக்கு எதிராக ஒரே ஒரு மனுவை தாக்கல் செய்த அவரின் முடிவு குறித்து கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், "தகுதியின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அனைத்தையும் ரத்து செய்ய முடியாது. எல்லா விஷயங்களுக்கும் ஆம்னிபஸ் (ஒரே கோரிக்கையில் பல விஷயங்களைக் கேட்பது) உத்தரவு பிறப்பிக்க முடியாது. குற்றச்சாட்டுகள் மீதான உத்தரவுகளை நீங்கள் ரத்து செய்யவேண்டும் என விரும்பினால் நீங்கள் நேரில் வந்திருக்கலாம். விசாரணை தொடங்கிய பின்பு இப்படி கேட்பது குறுக்கு வழியைத் தவிர வேறில்லை" என்று தெரிவித்தார்.
பிரிஜ் பூஷண் சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் மோகன், "இந்த வழக்கு (பாலியல் துன்புறுத்தல் வழக்கு) தொடரப்பட்டதன் பின்னணியில் மறைமுக நோக்கம் உள்ளது. புகார் தெரிவித்த அனைத்து மல்யுத்த வீராங்கனைகளும் பிரிஜ் பூஷணை மல்யுத்த கூட்டமைப்பு பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தனர்" என்று தெரிவித்தார்.
பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்வதற்கான பிரிஜ் பூஷணின் அனைத்து வாதங்களையும் ஒரு சிறு குறிப்பாக தாக்கல் செய்ய வழக்கறிஞரிடம் கூறியது. இதற்காக இரண்டு வாரம் அவகாம் வழங்கியது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 26-ம் தேதி நடைபெறும்.
முன்னதாக தனது மனுவில் பிரிஜ் பூஷண், "எனக்கு எதிரான விசாரணை பாரபட்சமானது. அது பாதிக்கப்பட்டவர்களாக கூறப்படுபவர்களின் பார்வையாக மட்டுமே இருந்தது. அவர்கள் அனைவரும் பழிவாங்கும் நோக்கத்துடன் தூண்டப்பட்டிருக்கிறார்கள். குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ள பொய்களை நிரூபிக்காமல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று வாதிட்டிருந்தார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய், வழக்கு தொடரும் அளவுக்கான குற்றங்கள் எதையும் நான் செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது ஆறு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து டெல்லி போலீஸார் பூஷண் மீது 2023 மே-ல் வழக்கு பதிவு செய்தனர். கடந்த ஆண்டு மே 21-ம் தேதி, பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்களின் கண்ணியத்தை சீர்குலைத்தல் போன்ற குற்றசாட்டுகளை பதிவு செய்திருந்தது. அதேபோல் மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் செயலாளரரும், பூஷணுடன் குற்றம்சாட்டப்பட்டவருமான வினோத் தோமர் மீது கிரிமினல் மிரட்டல் வழக்கினையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment