Published : 29 Aug 2024 11:42 AM
Last Updated : 29 Aug 2024 11:42 AM

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! - ராணுவம் நடவடிக்கை

எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் - கோப்புப் படம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இரண்டு வெவ்வேறு ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்ட ராணுவப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்த உளவுத் தகவலை அடுத்து மச்சல் மற்றும் தங்தார் பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இந்திய இராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து மச்சல், குப்வாரா பகுதிகளில் ஆக. 28 மற்றும் 29 தேதிகளில் ஒரு கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்தன. மோசமான வானிலை நிலவிய சூழலில், சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் இயங்கியது உணரப்பட்டதை அடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

தங்தார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மற்றொரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இரு இடங்களிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இது தொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள தகவலில், "ரஜோரி மாவட்டத்தில் உள்ள கேரி மொஹ்ரா லத்தி மற்றும் தண்டல் கிராம பகுதியில் புதன்கிழமை இரவு 11.30 மணி அளவில் பாதுகாப்புப் படையினரால் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சுமார் 11.45 மணி அளவில் பயங்கரவாதிகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x