Published : 29 Aug 2024 09:47 AM
Last Updated : 29 Aug 2024 09:47 AM

சொகுசு வசதி சர்ச்சை: பெங்களூரு சிறையில் இருந்து பெல்லாரி சிறைக்கு தர்ஷன் மாற்றம்

தர்ஷன் | கோப்புப்படம்

பெங்களூரு: ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன், வியாழக்கிழமை காலை பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். பெங்களூரு சிறையில் அவர் சொகுசு வசதிகளை பெற்றது தொடர்பான படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சை ஆனது.

இது தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்த நிலையில் பணியில் அலட்சியமாக இருந்ததாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையின் தலைமை கண்காணிப்பாளர் உட்பட 9 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், மூன்று விசாரணை குழுவையும் கர்நாடக காவல் துறை அமைத்துள்ளது. தர்ஷன் உட்பட 4 பேர் மீது விதியை மீறிய காரணத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த ஜூன் மாதம் அடைக்கப்பட்ட தர்ஷன், நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காஃபி கோப்பை மற்றும் சிகரெட் வைத்திருப்பது போன்ற படங்கள் வெளியாகின. தொடர்ந்து அவர் வீடியோ காலில் பேசும் படங்களும் வெளியாகின. இந்நிலையில், ரசிகரை கொலை செய்த வழக்கில் சிக்கிய தர்ஷன் உட்பட 17 பேர் பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 14 பேர் தற்போது வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான தர்ஷன் பெல்லாரி சிறைக்கு வியாழக்கிழமை காலை மாற்றப்பட்டார். இந்த வழக்கில் கைதான பவித்ரா கவுடா, அனுகுமார் மற்றும் தீபக் ஆகியோர் மட்டுமே பரப்பன அக்ரஹாரா சிறையில் தற்போது உள்ளனர்.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் கைது செய்யபப்ட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x