Last Updated : 16 Jun, 2018 03:51 PM

 

Published : 16 Jun 2018 03:51 PM
Last Updated : 16 Jun 2018 03:51 PM

‘வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் மோடி’: பிரதமரைச் சந்திக்க 1,350 கி.மீ. நடந்தே டெல்லி செல்லும் இளைஞர்

தங்களின் கிராமத்தை தரம் உயர்த்துவதாக மோடி அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்தி, வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, நடந்தே பிரதமரைச் சந்திக்க ஒடிசா மாநில இளைஞர் புறப்பட்டார்.

ஏறக்குறை. 1,350 கி.மீ நடந்து சென்ற அந்த இளைஞர் ஆக்ரா அருகே, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம், ரூர்கேலா அருகே சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் முக்திகாந்த்(வயது30). இவர் சிலைகளை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்குப் பிரதமர் மோடி ரூர்கேலாவுக்கு வந்தார். அப்போது, முக்திகாந்த் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தருவதாகவும், இஸ்பத் பொது மருத்துவமனையின் வசதிகளை அதிகப்படுத்தி, பன்முக சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயர்த்துவதாகவும், பிரம்மானி ஆற்றில் பாலம் கட்டுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், பிரதமர் மோடி ஒடிசாவுக்கு வந்துசென்று 3 ஆண்டுகள் ஆகியும், இன்னும் பாலம் அமைக்க அடிக்கல் கூட நாட்டவில்லை. கிராமங்களில் அடிப்படை வசதியும் மேம்படுத்தவில்லை, மருத்துவமனையில் வசதிகளும் அதிகப்படுத்தவில்லை.

இதைக் கண்ட முக்திகந்த் ரூர்கேலாவில் இருந்து நடந்து சென்று பிரதமர் மோடியைச் சந்திக்க முடிவு செய்தார். பிரதமர் மோடியைச் சந்திக்கும் போது, அவர் அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தி, கிராமத்துக்கும், மருத்துவமனைக்கும், வசதிகளைச் செய்யக்கோரியும், புதிய பாலம் அமைக்கவும் உதவுமாறு கேட்கப்போகிறேன் எனத் தெரிவித்து தனது நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

ஏறக்குறைய 1,350 கிலோமீட்டர் நடந்த முக்திகாந்த் கையில் தேசியக் கொடியுடன் ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் முக்திகாந்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தனது நடைப்பயணம் குறித்து முக்திகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:

ரூர்கேலா நகரில் உள்ள இஸ்பத் மருத்துவமனைதான் அப்பகுதியில் உள்ள அனைத்துக் கிராம மக்களுக்கும் முக்கியமானது. அந்த மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, பன்முக வசதி கொண்டதாக மாற்றுவதாகப் பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்தபோது வாக்குறுதி அளித்தார்.

அதுமட்டுமல்லாமல், ரூர்கேலாவைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதாகவும், பிரம்மாணி ஆற்றில் பாலம் கட்டுவதாகவும் தெரிவித்தார். ஆனால், அடிக்கல்கூட நாட்டவில்லை. 4 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், எந்தவிதமான பணிகளும் நடக்கவில்லை.

இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் பிரதமர் மோடிக்கு நினைவு படுத்தி, அதை நிறைவேற்றித் தரக்கோரி அவரைச் சந்திக்க நடைப்பயணம் மேற்கொண்டேன் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x