Published : 28 Aug 2024 06:19 PM
Last Updated : 28 Aug 2024 06:19 PM
காந்திநகர்: குஜராத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை (ஆக.26) பெய்த கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று மேலும் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதன் மூலம் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்ததாலும், நீரில் மூழ்கியதாலும் 9 பேர் இறந்தனர். ஆனந்த் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மகிசாகர் மாவட்டத்தில் 2 பேரும், கேடா மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் தலா ஒருவரும் சுவர் இடிந்த சம்பவங்களால் உயிரிழந்துள்ளனர். ஜுனாகத் மற்றும் பரூச் மாவட்டங்களில் தலா ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்" என்று குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 8,460 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் நவ்சாரியில் இருந்து சுமார் 3,000 பேரும், வதோதரா மற்றும் கெடாவிலிருந்து தலா 1,000 பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் பூபேந்திர படேல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “குஜராத் கனமழை நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். மக்கள் மற்றும் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதலை வழங்கினார். மேலும் மத்திய அரசின் அனைத்து ஆதரவையும் உதவியையும் உறுதி செய்தார்.
பிரதமர் மோடி, குஜராத் மீது அக்கறை காட்டி நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். குஜராத் மக்கள் மீது அவருக்கு ஆழ்ந்த பாசம் உண்டு. இயற்கை பேரிடர்களின் போதும், தேவைப்படும் போதெல்லாம் அவர் குஜராத் மக்களுக்கு ஆதரவாக நிற்கிறார். விலைமதிப்பற்ற வழிகாட்டுதலை வழங்குகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
சவுராஷ்டிரா பிராந்தியத்தின் பல மாவட்டங்கள், குறிப்பாக துவாரகா, ஜாம்நகர், போர்பந்தர், ராஜ்கோட் ஆகிய இடங்களில் புதன்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்ததாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் (SEOC) தெரிவித்துள்ளது. துவாரகா மாவட்டத்தில் உள்ள கம்பாலியா தாலுகாவில் மட்டும் 454 மிமீ மழையும், ஜாம்நகரில் 387 மிமீ மழையும், ஜாம்ஜோத்பூர் தாலுகாவில் 329 மிமீ மழையும் பதிவாகியுள்ளன. மாநிலத்தின் 251 தாலுகாக்களில் 13 தாலுகாக்களில் 200 மிமீக்கு மேல் மழை பெய்துள்ளது. மேலும் 39 தாலுகாக்களில் 100 மிமீக்கு மேல் மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வதோதராவில் மழை ஓய்ந்த நிலையில், விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மோர்பி, ஆனந்த், துவாரகா, ராஜ்கோட் மற்றும் வதோதரா ஆகிய இடங்களில் தலா ஐந்து ராணுவ வீரர்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஜராத்தில் உள்ள 137 நீர்த்தேக்கங்கள், 24 ஆறுகள் ஆகியவற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உட்பட 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. குஜராத் இதுவரை அதன் சராசரி ஆண்டு மழையில் 105% பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT