Published : 28 Aug 2024 02:06 PM
Last Updated : 28 Aug 2024 02:06 PM

திரிணமூல் காங்கிரஸ் நிறுவன நாள் - “கொல்லப்பட்ட மருத்துவ மாணவிக்கு அர்ப்பணிக்கிறேன்” - மம்தா பானர்ஜி

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் நிறுவப்பட்ட தினத்தை ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவிக்கு அர்ப்பணிப்பதாக அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் துயரமான முறையில் கொல்லப்பட்ட எங்கள் சகோதரிக்கு இன்று திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினத்தை அர்ப்பணிக்கிறேன். கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்த அந்த சகோதரியின் குடும்பத்தினருக்கும், இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களுக்கு ஆளான இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வயதுப் பெண்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்கள்.

மாணவர்கள், இளைஞர்கள் சமூகத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர். சமுதாயத்தையும், கலாச்சாரத்தையும் விழிப்புடன் வைத்திருப்பதன் மூலம், புதிய நாளின் கனவை வழங்குவதும், சுற்றியுள்ள அனைவருக்கும் ஊக்கமளிப்பதும் மாணவர் சமுதாயத்தின் பணியாகும். இன்று அவர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள், இதில் நீங்கள் உறுதியுடன் இருங்கள். என் அன்பான மாணவர்களே, நலமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதியுடன் இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மருத்துவக் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியின் போது, போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பாஜக 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இன்று (புதன்) அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுகந்த மஜூம்தார், சுவேந்து அதிகாரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x