Published : 28 Aug 2024 01:09 PM
Last Updated : 28 Aug 2024 01:09 PM

ஜன்தன் திட்டத்தின் 10-ம் ஆண்டு: 53+ கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஜன்தன் யோஜனா தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திட்டத்தின் மூலம் 53 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏழைகள் பலர் வங்கிக் கணக்கு இன்றி இருந்த நிலையில் அனைவரும் வங்கிக் கணக்கை தொடங்குவதற்காக கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜன்தன் திட்டத்தைத் தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் மினிமம் பேலன்ஸ் இன்றி வங்கிக் கணக்கை பராமரிக்க முடியும். இதன்மூலம், கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 53.13 கோடி பேர் இத்திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். இதில் சுமார் 30 கோடி பேர் பெண்கள். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்கள் தங்கள் கணக்குகளில் ரூ. 2.31 லட்சம் கோடி இருப்பு வைத்துள்ளனர். அரசின் நிதி உதவிகள் பயனர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் நிலையில், ஜன்தன் திட்ட கணக்குகள் மூலமாக ரூ. 38.49 லேட்சம் கோடி நேரடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், இதன் காரணமாக ரூ. 3.48 லட்சம் கோடி விரயமாவது தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ஜன்தன் திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களில் 36.14 கோடி பேருக்கு ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜன்தன் திட்டத்தின் மூலம் கணக்கு தொடங்கியவர்களில் 66.6% பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். 55.6% பேர் பெண்கள்.

இந்நிலையில், இத்திட்டம் தொடங்கப்பட்டதன் 10ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டதன் 10ம் ஆண்டு என்பது ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துகள். இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நிதி உள்ளடக்கத்தை அதிகரிப்பதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு கண்ணியம் அளிப்பதிலும் ஜன்தன் திட்டம் முதன்மையானது” என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய திட்டம் ஜன்தன் யோஜனா. இத்திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையச் செய்து, கூட்டு பொருளாதாரத்தின் மூலம் அவர்களின் கனவுகளுக்கு வலிமையை ஏற்படுத்தி இருக்கிறார். இது கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதித்துறையை மாற்றி உள்ளது. அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பதிவில், “ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டதன் 10ம் ஆண்டு நிறைவு தினம் இன்று. இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துகள். இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x