Published : 28 Aug 2024 09:20 AM
Last Updated : 28 Aug 2024 09:20 AM
கொல்கத்தா: கொல்கத்தா மாணவர் பேரணியில் போலீஸ் தாக்குதலை கண்டித்து இன்று (புதன்கிழமை) 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், ஹூக்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டது. மாநிலத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மட் அணிந்து பேருந்தை இயக்குகிறார்கள். இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
பந்த் காரணமாக தலைமைச் செயலக பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் ஹரிஷ் சாட்டர்ஜி சாலையில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜியின் வீடு முன்பும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பந்த் ஏன்? - முன்னதாக, பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி நேற்று (செவ்வாய்க் கிழமை) ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக மாறின. இதில் 100 மாணவர்களும், 15 போலீஸாரும் காயமடைந்தனர்.
இரு தரப்பு மோதல் காரணமாக, கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக காணப்பட்டன. போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக 220 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து 28-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்துக்கு மேற்கு வங்கம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் சுகாந்த் மஜும்தார் நேற்று அறிவித்தார். அதன்படி இன்று (ஆக.28) காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது.
ரயில் மறியல், தடுப்புக் காவல்: ஹூக்லியில் ரயில் மறியலில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதேபோல் பதற்றம் நிறைந்த ஹவுரா பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மட் அணிந்து வாகனங்களை ஓட்டி வருகின்றனர். தற்காப்புக்காக ஹெல்மட் அணிந்து பேருந்து ஓட்டுவதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். கூச் பெஹாரில் 2 பாஜக எம் எல் ஏ.,க்கள் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பந்த் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர் தலைவர் சயான் லஹிரி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
திரிணமூல் வேண்டுகோள்: இன்றைய பந்த் முழுவீச்சில் நடத்தப்படும் என்று சூளுரைத்து பாஜக களமிறங்கியுள்ள நிலையில், மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் அலப்பன் பந்தோப்தயாய் இயல்பு வாழ்க்கை பாதிக்காது மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். அதில் இன்றைய பந்த் காரணமாக மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகள் ஏதும் பாதிக்கப்படாது.
போக்குவரத்து சேவை இயல்பாக இருக்கும். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அரசுப் பணியாளர்களும் வழக்கம்போல் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். இன்றைய பந்தை ஆதரிக்க வேண்டாம் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் குனால் கோஷ், “பந்த் அழைப்பு மூலம் பாஜகவே நேற்றைய பேரணி, வன்முறையின் பின்னணியில் இருக்கின்றது என்பது அம்பலமாகியுள்ளது. பாஜகவின் இந்தத் திட்டத்தை அறிந்துள்ள மக்கள் இன்றைய முழுஅடைப்புப் போராட்டத்தைப் புறக்கணிப்பார்கள் என நம்புகிறேன்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT