Published : 28 Aug 2024 05:21 AM
Last Updated : 28 Aug 2024 05:21 AM

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான 9 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதையடுத்து 32 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய மாநாட்டுக் கட்சி நேற்று வெளியிட்டது. இதனிடையே 29 பேர் கொண்ட 3-வது பட்டியலை வெளியிட்டது பாஜக.

அக்.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை: ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. வரும் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அக்.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதில் இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு நிறைவுபெற்றது. இதன்படி காங்கிரஸ் 32 இடங்களிலும், தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளன.

இண்டியா கூட்டணியைச் சேர்ந்த பிற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர்ஸ் கட்சி தலா 1 இடத்தில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதில் 9 பேர் இடம்பெற்றுள்ளனர். த்ரால் தொகுதியில் சுரேந்தர் சிங் சன்னி, தேவ்சர் தொகுதியில் அமனுல்லா மான்ட்டூ உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

இதேபோன்று தேசிய மாநாட்டுக் கட்சிசார்பில் போட்டியிடும் முதல் 32 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. கந்தர்பால் தொகுதியில் முன்னாள்முதல்வரும் கட்சியின் துணைத் தலைவரு மான உமர் அப்துல்லாவும், ஜாடிபால் தொகுதியில் கட்சியின் மூத்த தலைவர் தன்வீர் சாதிக்கும் போட்டியிடுகின்றனர்.

இது குறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியதாவது: வகுப்புவாதம் செய்து நாட்டை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்படும் ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடவே ஒட்டுமொத்த நாடும், இண்டியா கூட்டணியும் இணைந்துள்ளோம். சுமுகமான சூழ்நிலை யில் ஒருங்கிணைந்து தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்திருக்கிறோம். காங்கிரஸும் தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைந்து ஒன்றுபட்டுத் தேர்தலில் போட்டியிடுவோம்.

இவ்வாறு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறினார்.

ஏற்கெனவே நேற்று முன்தினம், 44 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக. இந்நிலையில் செப்.25-ம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடவிருக்கும் 10 வேட்பாளர்களின் பெயர் பட்டியலையும், அக்.1-ம் தேதி நடைபெறவிருக்கும் மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிட விருக்கும் 19 வேட்பாளர்களின் பெயர் பட்டியலையும் பாஜக நேற்று வெளியிட்டது. இதில் அசோக் பாத், முகமது அக்ரம் சவுத்ரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x