Published : 03 Jun 2018 04:14 PM
Last Updated : 03 Jun 2018 04:14 PM
இணையதளங்களில் ‘டான்ஸிங் அங்கிள்’ என அழைக்கப்படும் மத்தியப் பிரதேச மாநில கல்லூரிப் பேராசிரியருக்கு அந்த மாநில அரசு புதிய பதவி வழங்கியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, கல்லூரி பேராசிரியரான ஸ்ரீவஸ்தவா இந்திய நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகர். எந்தத் திருமண வீட்டுக்குச் சென்றாலும், குறைந்தபட்சம் ஒரு கோவிந்தா பாடலுக்கு நடனமாடி விட்டுத்தான் வருவார். கோவிந்தா திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலுக்கான நடனத்தையும் அதேபோன்று ஸ்ரீவஸ்தவா ஆடுவார்.
கடந்த மே மாதம் 12-ம் தேதி ஸ்ரீவஸ்தவா தனது சகோதரர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக குவாலியர் நகருக்குச் சென்றார். அப்போது, கோவிந்தாவின் ‘குத்கர்ஸ்’ திரைப்படத்தில் வரும் ‘ஆப் கே ஆ ஜானே சே’ என்ற பாடலுக்கு நடனமாடியபோது இவரை வீடியோ எடுத்தனர்.. அந்தத் திரைப்படத்தில் நடிகர் கோவிந்தாவின் நடன அசைவுகளைப் பின்பற்றி ஸ்ரீவஸ்தவா நடனமாடினார். ஸ்ரீவஸ்தவா நடனமாடிய வீடியோ காட்சிகள் யூடியூப்பில் சிலர் பதிவேற்றம் செய்துவிட்டனர். அந்த வீடியோ வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என நாடுமுழுவதும் பரவி வைரலானது.
இந்நிலையில், இந்த வீடியோ காட்சியைப் பார்த்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்சவுகானும் ஸ்ரீவஸ்தவாவின் நடனத்தைப் பார்த்து பாராட்டி இருந்தார்.
ஸ்ரீவஸ்தவாவின் நடனத்தைப் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் பார்த்தவர்கள் நாள்தோறும் அவருக்கு தொலைபேசியிலும், செல்போனிலும் அழைத்து பாராட்டியபடி இருக்கின்றனர். தன்னுடைய நடனத்துக்கு திடீரென இப்படி ஒருவரவேற்பா என்று ஸ்ரீவஸ்தவா ஆனந்த அதிர்ச்சியடைந்துவிட்டார்.
இந்நிலையில், ஸ்ரீவஸ்தவாவின் நடனம் மாநிலம் முழுவதும் பரவியுள்ள நிலையில், அவருக்கு புதிய பதவியை மத்தியப் பிரதேச அரசு வழங்கியுள்ளது. ஸ்ரீவஸ்தவா சார்ந்துள்ள விதிஷா நகராட்சியின் கவுரவத் தூதுவராக அவரை நியமித்து அந்தமாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நகராட்சியின் நற்பெயரை மக்களின் மத்தியில் கொண்டு செல்வதற்காக ஸ்ரீவஸ்தவாவுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவஸ்தவாவின் நடனத்தை ஃபேஸ்புஸ்கில் பார்த்த பாலிவுட் நடிகைகள் ரவீணா டாண்டன், திவ்யா தத்தா, அர்ஜூன் கபூர், அனுஷ்கா சர்மா, தியா மிர்ஸா, திவ்யா தத்தா, சந்தியா மேனன் உள்ளிட்ட பல நடிகைகளும் ஸ்ரீவஸ்தவாவை தனிப்பட்ட முறையில் செல்போனில் அழைத்துப் பாராட்டியுள்ளனர்.
தனக்கு வழங்கப்பட்ட பதவி குறித்து ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''எனக்கு இப்படிப்பட்ட பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. என் நடனத்தையும் இத்தனை லட்சம் பேர் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் இல்லை. என் வீடியோ வைரலாகி லட்சக்கணக்கான மக்கள் இதைப் பார்த்துள்ளனர். எனக்கு ஆதரவு அளித்து, என் வீடியோவைப் பார்த்த அனைவருக்கும் நன்றி. கடந்த 1982-ம் ஆண்டில் இருந்து கோவிந்தாவின் ரசிகன். அவரின் நடனத்தைப் பார்த்து நானும் நடனமாடி வருகிறேன்.
என் நடனத்துக்குப் பாராட்டு தெரிவித்து கடந்த 2 நாட்களாக தொடர்ந்து என் செல்போனுக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. நாடு முழுவதும் ஊடகங்களின் , பத்திரிகைகளின் கவனத்தையும் நான் ஈர்த்துவிட்டேன். எனக்கு ஒருமணி நேரத்துக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து கொண்ட இருப்பதால், என்னால் பேசக்கூட முடியவில்லை'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT