Published : 26 Aug 2024 04:22 AM
Last Updated : 26 Aug 2024 04:22 AM
பெங்களூரூ: இந்திய அளவில் சராசரியாக 37% பெண்கள் தற்போது வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இந்த சதவீதம் வரும் 2047-ம் ஆண்டுக்குள் பன்மடங்கு பெருகி 70% இந்தியப் பெண்கள் பணி புரியத் தொடங்கும்போதுதான் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட முடியும் என்று புதிய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள தி நட்ஜ் இன்ஸ்டிடியூட் என்னும் தன்னார்வதொண்டு நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா30 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய வேண்டும்என்பதே அரசின் குறிக்கோளாகும்.
இந்திய அரசு நிர்ணயித்த இலக்குபடி 11 கோடி பெண்கள்மட்டுமே 2047-ல் இந்திய வேலைசந்தையில் இடம்பெறவிருக்கின்றனர். ஆனால், தற்போது உள்ளதைக் காட்டிலும் கூடுதலாக 40 கோடி பெண்கள் பணித்துறையில் கால்பதிக்கும் பட்சத்தில் இந்திய பொருளாதாரத்தில் 14 டிரில்லியன் டாலர் பங்களிப்பை வழங்க முடியும். இதன் மூலம் 30 டிரில்லியன்டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியும் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
உத்தரவாதம் மிகுந்த வேலைகளில் பணியமர்த்தப்படுவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வு இதில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுடன் ஒப்பிடுகையில் வேலை இழக்கும் அபாயம் பெண்களுக்கு ஏழு மடங்கு கூடுதலாக இருப்பதாகவும், இழந்த வேலை மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு 11 மடங்கு ஆண்களைக்காட்டிலும் பெண்களுக்கு குறைவாக இருப்பதாகவும் இதில் தெரிவிக்கப்பட் டுள்ளது. உதாரணத்துக்கு, கடந்த 2019-ல் வேலை செய்து வந்த பெண்களில் சரி பாதி பேர் 2020-ல் கரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை இழக்க நேரிட்டது. அதேபோன்று, குறைந்த உற்பத்தித் திறன்கொண்ட விவசாயம், தயாரிப்புத்துறைகளில் மட்டுமே அதிக எண்ணிக்கையிலான பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அமைப்புசாரா கட்டிடத்தொழிலில் 12% பெண்கள் வேலை செய்துவரும் சூழலில் அவர்களுக்கு ஆண்களை விடகுறைந்த கூலி அளிக்கப்படுகிறது.
இத்தகைய சவால்களை எதிர்கொள்ள இந்த ஆய்வறிக்கை மூன்றுமுக்கிய வழிகளை பரிந்துரைக்கிறது. முதலாவதாக, ஆன்லைன் தளங்கள் வழியாக பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பது.
இரண்டாவதாக, சுயதொழில் செய்ய ஆன்லைன் வணிக கட்டமைப்பினை பலப்படுத்துவது. மூன்றாவதாக, பணிச்சந்தையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க டிஜிட்டல் பயன்பாட்டில் அவர்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்களைக் களைவது.
இதுகுறித்து தி நட்ஜ் நிறுவனத்தின் தலைவரும் இயக்குநருமான கனிஷ்கா சாட்டர்ஜி கூறுகையில், ‘‘பணிச்சூழலில் பெண்களின் பங்கேற்பு இல்லாமல் இந்தியாவின் 30 டிரில்லியன் டாலர் கனவு நனவாகாது. தொழிலாளர்களில் பணி பங்கேற்பு விகிதம் என்கிற சிக்கலுக்குத் தீர்வு காண முழுமையான அணுகுமுறை அவசியமாகிறது. எத்தகைய தொழிலாளர்கள் வேலைக்குக் கிடைக்கிறார்கள், அவர்களிடம் உள்ள திறன்கள் யாவை என்பதை மட்டுமல்லாமல் இன்றைய தேவை என்ன என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT