Published : 26 Aug 2024 04:01 AM
Last Updated : 26 Aug 2024 04:01 AM

மிஸ் இந்தியா பட்டியலில் தலித், பழங்குடியினர் இல்லாதது ஏன்? - ராகுல் கருத்துக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

பிரயாக்ராஜ்: மிஸ் இந்தியா போட்டியின் பங்கேற்பாளர்களில் ஏன் ஒருவர் கூட தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் இல்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பி உள்ளார்.

ஆனால், அவரின் இந்த கேள்வி சிறுபிள்ளைத்தனமானது என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராகுல் இதுகுறித்து கூறியதாவது: மிஸ் இந்தியா பட்டியலை நான் முழுமையாக ஆராய்ந்து பார்த்தேன். ஏன் அதில், தலித், பழங்குடியினர் (ஆதிவாசி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் (ஓபிசி) சேர்ந்த ஒரு பெண் கூட இடம்பெறவில்லை. சிலர் கிரிக்கெட்டை பற்றியும், பாலிவுட்டைப் பற்றியும் பேசுவார்கள். ஆனால், செருப்புத் தைக்கும் தொழிலாளியையோ, பிளம்பர்களையோ பற்றி பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை. சொல்லப்போனால் ஊடகங்களில் உள்ள டாப் தொகுப்பாளர்களில் மேற்கண்ட சமூக பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை.

ஒரு நாட்டின் மக்கள் தொகையில் 90 சதவீதத்தினரை புறக்கணித்துவிட்டு அரசு திறம்பட செயல்பட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. 90 சதவீத மக்களின் பங்கேற்பு இல்லாத நிலையில் நாம் எப்படி வல்லரசாக முடியும். பிரதமர் மோடியோ செல்வந்தர்களின் பக்கம் உள்ளார்.

அனைத்து மக்களுக்கும் சம அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த கோரிக்கை வைத்தால் நான் நாட்டை பிரிக்க முயற்சிப்பதாக பாஜவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மிஸ் இந்தியா , பாலிவுட், கார்ப்பரேட் நிறுவனங்கள், இன்ஸ்டிடியூசன் போன்ற அமைப்புகளில் 90 சதவீதத்தினரில் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறோம். எனவே இதுகுறித்து தீர ஆராயப்பட வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்து சிறுபிள்ளைத்தனமானது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், “ ராகுல், இப்போது மிஸ் இந்தியா போட்டிகள், திரைப்படங்கள், விளையாட்டுகள் உள்ளிட்டவற்றுக்கும் இடஒதுக்கீடு கோருகிறாரா? அவரின் இந்த கேள்வி சிறுபிள்ளைத்தனமானது. இதற்கு, ராகுல் மட்டுமல்ல அவரை ஆதரிக்கும் நபர்களும் பொறுப்பு. இதுபோன்ற குழந்தைத்தனமான கேள்விகள் கேட்பது ராகுலுக்கு வேண்டுமானால் பொழுதுபோக்காக இருக்கலாம். உங்கள் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்களை கேலி செய்யாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x