Published : 25 Aug 2024 06:28 PM
Last Updated : 25 Aug 2024 06:28 PM

‘‘யுபிஎஸ்-ன் ‘யு’ என்பது மோடி அரசின் யு - டர்ன்களை குறிக்கிறது’’ - மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: யுபிஎஸ்-ல் உள்ள ‘யு’என்பது மோடி அரசின் யு டர்ன்களைக் குறிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேலி செய்துள்ளார். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட அறிவிப்பு குறித்து கார்கே இவ்வாறு சாடியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கார்கே வெளியிட்டுள்ள ஒரு எக்ஸ் பதிவில், "மக்களவைத் தேர்தலுக்கு பின்பு, எதிர்க்கட்சிகளின் எழுச்சிக்கு பின்பு மோடி தலைமையிலான அரசு அதன் சமீபத்திய முக்கிய முடிவுகளை திரும்பப் பெற்றுள்ளது. யுபிஎஸ்-ல் உள்ள ‘யு’ என்பது மோடி அரசின் யு-டர்ன்களை குறிக்கிறது. ஜூன் 4-ம் தேதிக்கு பின்பு, பிரதமரின் அதிகாரத் திமிரை விட மக்களின் அதிகாரம் மேலாங்கத் தொடங்கி உள்ளது. நீண்ட கால மூலதன ஆதாயம், அட்டவணைப்படுத்தல் - ஐ பட்ஜெட்டில் திரும்பப் பெற்றது. வக்ஃப் வாரிய மசோதாவை நாடாளுமன்றக் கூட்டு குழுவுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதாவை திரும்பப் பெற்றது, நேரடி நியமன அறிவிப்பை திரும்பப் பெற்றது. பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம், இந்த சர்வாதிகார ஆட்சியில் இருந்து 140 கோடி இந்தியர்களை பாதுகாப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு (UPS) மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தினை தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு, குறைந்தபட்சத் தகுதியான 25 ஆண்டு பணிக்காலச் சேவைக்கு முந்தைய 12 மாத ஊதியத்தின் சராசரியில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவர். இந்தத் திட்டம், குறைந்தபட்சம் 10 வருட பணிச்சேவைக்கு பின்பு, குறைந்தபட்சம் ரூ.10,000 பெறுவதை உறுதி செய்கிறது.

இதனிடையே பாஜக அரசு ஆளாத மாநிலங்கள், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக (என்பிஎஸ்) பழைய ஓய்வூதிய திட்டத்துக்குத் (ஓபிஎஸ்) திரும்ப முடிவு செய்துள்ளன. பிற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் அமைப்புகள் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.

பழைய ஓய்வு ஊதிய திட்டத்தின் படி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தான் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற முடியும். அகவிலைப்படி விகிதங்களின் அதிகரிப்புடன் ஓய்வூதியம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x