Published : 25 Aug 2024 07:12 AM
Last Updated : 25 Aug 2024 07:12 AM
அயோத்தி: பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகியை புகழ்ந்ததால் மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது உ.பி. போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரெய்ச் நகரைச் சேர்ந்த மரியம் மற்றும் அயோத்தியைச் சேர்ந்த அர்ஷத் ஆகிய இருவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் 13-ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், அர்ஷத் தனது மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக மரியம் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் மரியம் கூறியிருப்பதாவது:
திருமணத்துக்குப் பிறகு அயோத்தியில் உள்ள கணவரின் வீட்டுக்குச் சென்றேன். அயோத்தி நகரின் சாலைகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் என்னைக் கவர்ந்தன. இதையடுத்து, என் கணவர் முன்பு முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினேன். இதனால் கோபமடைந்த என் கணவர் என்னை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
பின்னர் என் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி என்னை அயோத்தியில் உள்ள கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அப்போதும் என் கணவர் என்னை திட்டியதுடன், முதல்வர் யோகி மற்றும் பிரதமர் மோடியையும் திட்டினார். பின்னர் மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி என்னை விவாகரத்து செய்துவிட்டு அடித்தார். கணவரின் தாய், தங்கை மற்றும் சகோதரர்கள் என அனைவரும் என் கழுத்தை நெரிக்க முயன்றனர். இதுகுறித்து பரெய்ச் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மரியம் கொடுத்த புகாரின் பேரில் பரெய்ச் நகர போலீஸார் அர்ஷத் உட்பட அவரது குடும்பத்தினர் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அடித்து துன்புறுத்துதல், மிரட்டுதல், வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் முத்தலாக் தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT