Published : 24 Aug 2024 06:19 PM
Last Updated : 24 Aug 2024 06:19 PM

“சிபிஐ அதிகாரிகள் உடனான சந்திப்பில் திருப்தி இல்லை” - கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவர்கள்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அளித்த பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என்று அவர்களைச் சந்தித்த ஆர்.ஜி. கர் பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த வழக்கு மாநில காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழுவிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த துயர சம்பவத்தைக் கண்டித்து ஆர்.ஜி. கர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது. நேற்று (ஆக. 23) நடைபெற்ற விசாரணையின்போது, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ், டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.

எனினும், ஆர்.ஜி.கர் பயிற்சி மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டனர். இதன் காரணமாக ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. உள்நோயாளிகளுக்கான சிகிச்சையை மூத்த மருத்துவர்கள் வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், விசாரணையின் நிலை மற்றும் அது எப்போது முடியும் என்பது குறித்து அறிந்து கொண்டு, அதற்கேற்ப தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய திட்டமிட்ட ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் குழு, கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகளை அவர்களது அலுவலகத்தில் நேற்று சந்தித்தது.

இந்தச் சந்திப்பு குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள பயிற்சி மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கிஞ்சல், "சி.ஜி.ஓ. வளாகத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகளை ஐந்து பேர் கொண்ட பயிற்சி மருத்துவர்கள் சந்தித்தோம். அங்கிருந்தும் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. எங்களின் ஒரே கோரிக்கை என்பது நியாயமே. எங்களின் தொடர் போராட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்று சி.பி.ஐ.யிடம் கூறினோம். நீங்கள்தான் விசாரணை நடத்துகிறீர்கள் என்பதால் அனைத்தும் உங்கள் கைகளில்தான் உள்ளது என தெரிவித்தோம்.

இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் குறித்து நீங்கள் எங்களுக்கு விரைவாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், நாங்கள் எங்களின் போராட்டத்தின் திசை குறித்து முடிவெடுக்க முடியும் என கூறினோம். ஆனால் அவர்கள், நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறினார்கள். விசாரணையின் கால அளவு குறித்து கேட்டோம். அது குறித்து சொல்ல முடியாது என தெரிவித்துவிட்டார்கள். அதேநேரத்தில், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணையை முடிப்போம் என்றார்கள்" என்று தெரிவித்தார்.

உண்மை கண்டறியும் சோதனை: இதற்கிடையில், டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்கள் குழு, பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் பலரிடம் உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்வதற்காக இன்று (ஆக. 24) கொல்கத்தா சென்றடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நிதி முறைகேடு விசாரணை: சந்தீப் கோஷ் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த காலத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்த வழக்கை சிபிஐ இன்று எடுத்துக்கொண்டது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொண்டு வந்த விசாரணை, சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை சிறப்பு விசாரணைக் குழு, சிபிஐ வசம் ஒப்படைத்தது. மேலும், இது குறித்து முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x