Published : 24 Aug 2024 03:01 PM
Last Updated : 24 Aug 2024 03:01 PM

மாயாவதி குறித்த கருத்து: பாஜக எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு தொடர அகிலேஷ் வலியுறுத்தல்

அகிலேஷ் யாதவ் | கோப்புப்படம்

லக்னோ: பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குறித்து பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி தெரிவித்த கண்ணியமற்ற கருத்துக்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெள்ளிக்கிழமை ஒரு செய்தி தொலைக்காட்சியின் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தின் மன்ட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ராஜேஷ் சவுத்ரி, “மாயாவதி உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக நான்கு முறை இருந்துள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. நாங்கள் தான் (பாஜக) அவரை முதல் முறையாக முதல்வராக்கிய தவறைச் செய்தோம். உத்தரப் பிரதேசத்தின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் மாயாவதியே” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏவின் இந்தக் கருத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார். இதுகுறித்து இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் பெண் முதல்வருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ பயன்படுத்தி இருக்கும் தவறான சொற்கள் பாஜக தலைவர்கள் பெண்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட பிரிவுகளில் இருந்து வருபவர்களுக்கு எதிராக எவ்வாளவு கசப்பைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

அரசியலில் வேறுபாடுகளுக்கு இடம் உண்டு, ஆனால் ஒரு பெண்ணாக அவரது (மாயாவதி) கண்ணியத்தைக் கெடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அவரை முதல்வராக உருவாக்கி தவறு செய்துவிட்டதாக பாஜக தெரிவித்திருக்கிறது. இது ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்துக்களை அவமதிக்கும் செயலாகும்.

மேலும் அவர் ஊழல் நிறைந்த முதல்வர் என்று ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. பொதுவெளியில் இப்படி ஒரு கருத்தினை தெரிவித்ததற்காக பாஜக எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்.

இப்படியான எம்எல்ஏக்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், பாஜக பெண்களின் கண்ணியத்தினை புண்படுத்துகிறது. இதுபோன்றவர்கள் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது ஒரு தனிப்பட்ட எம்எல்ஏவின் தனிப்பட்ட கருத்து இல்லை, ஒட்டுமொத்த பாஜகவின் கருத்து என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x