Published : 24 Aug 2024 08:09 AM
Last Updated : 24 Aug 2024 08:09 AM
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்காக (இஸ்ரோ) மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் இரண்டரை மடங்கு முதலீடாக திரும்ப வருகிறது என்று அதன் தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: இந்தியா இதுவரை 97 ராக்கெட்களை ஏவி யுள்ளது. மேலும் 432 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அதன் சுற்றுப்பாதைகளில் சுற்றி வரச் செய்துள்ளது.
இஸ்ரோவுக்காக மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும், அதைவிட 2.54 மடங்கு கூடுதல் முதலீடாக நமக்குத் திரும்பக் கிடைத்து வருகிறது. இதன்மூலம் இஸ்ரோவுக்காக செலவு செய்யும் தொகை அனைத்தும் நமது நாட்டின் விண்வெளி துறை மேம்பாட்டுக்காக பயன்படுகிறது.
ஏழை அல்லது பணக்காரர் என்ற வித்தியாசமின்றி ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் இஸ்ரோ தொட்டுள்ளது. இஸ்ரோவுக்காக செலவழிக்கும் தொகையானது, சமூகத்துக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் உடனடியாக உதவுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐரோப்பிய விண்வெளி ஆலோசனை நிறுவனமான நோவாஸ்பேஸ் தயாரித்த ‘இந்திய விண்வெளித் திட்டத்தின் சமூக-பொருளாதார தாக்க பகுப்பாய்வு' என்ற பெயரில் புதிய அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த பத்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாக இந்திய விண்வெளித் துறை, தேசியப் பொருளாதாரத்தை 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தியுள்ளது என்றும், 47 லட்சம் வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவாக இருந்தது என்றும், பொது நிதியை 24 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு வரி வருவாயில் உயர்த்தியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நோவாஸ்பேஸ் நிறுவன முன்னணி நிபுணர் ஸ்டீவ் போச்சிங்கர் கூறும்போது, ‘‘விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இஸ்ரோ தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 55 ஆண்டுகளில் இதுவரை இஸ்ரோவில் செய்யப்பட்ட மொத்த முதலீடு, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒரு வருட பட்ஜெட்டை விடக் குறைவு. ஆனாலும், இஸ்ரோ தொடங்கப்பட்டது முதல் 127 இந்திய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன” என்றார்.
இஸ்ரோ மையமானது 1963-ல் கேரள மாநிலத்தில் உள்ள கடற் கரை கிராமமான தும்பாவில் தொடங்கப்பட்டது. அப்போது, இறக்குமதி செய்யப்பட்ட நைக் அபாச்சி ராக்கெட் மூலம் செயற்கைகோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. தற்போது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட எல்விஎம்-3 ரக ராக்கெட் மூலம் அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் திறனை இஸ்ரோ பெற்றுள்ளது. இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT