Published : 09 May 2018 07:12 AM
Last Updated : 09 May 2018 07:12 AM

திருப்பதியில் கங்கையம்மன் திருவிழா தொடக்கம்

திருப்பதியில் கங்கையம்மன் திருவிழா நேற்று பறைசாட்டும் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.

திருப்பதி நகரில் உள்ள புகழ்பெற்ற தாத்தய்ய குண்டா கங்கையம்மன் கோயிலில் பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத கடைசி நாளில் கங்கையம்மன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று காலையில், இந்தத் திருவிழா பறைசாட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, இக்கோயிலில் படிபூஜை நடத்தப்பட்டு, மூலவரான அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதையடுத்து, தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திருப்பதி எம்எல்ஏ சுகுணம்மா உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று முதல் மே 14-ம் தேதி வரை தினமும் பக்தர்கள் பல்வேறு வேடங்களிட்டு அம்மனை தரிசிப்பர். பின்னர், 15-ம் தேதி, கங்கையம்மன் திருவிழா சிறப்பாக நடைபெறும். அன்றை தினம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அம்மனுக்கு பட்டுப்புடவை, நகைகள், மஞ்சள், குங்குமம், வளையல் போன்றவை சீர்வரிசையாக வழங்கப்படும். இந்த நாளில், பக்தர்கள் அதிகாலை முதலே அம்மனுக்கு கூழ் வார்த்தும், படையல் படைத்தும் நேர்த்திக் கடன் செலுத்துவர். பின்னர் மறுநாள் அதிகாலையில், அம்மன் விஸ்வரூப தரிசனம் நடத்தப்படும். இந்தத் திருவிழாவை ஒட்டி, அம்மனை தரசிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x