Published : 23 Aug 2024 07:05 PM
Last Updated : 23 Aug 2024 07:05 PM
புதுடெல்லி: இந்திய மல்யுத்த அமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு எதிராக சாட்சி சொல்ல இருக்கும் மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு நீக்கம் என்ற முந்தைய தகவல் பிழை சரிசெய்யப்பட்டுவிட்டதாக டெல்லி போலீஸ் நீதிமன்றதில் தெரிவித்துள்ளது.
டெல்லி நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை ஜூடிஷியல் நீதிபதி பிரியங்கா ராஜ்புத், பிரிஜ் பூஷணுக்கு எதிராக சாட்சி சொல்ல இருக்கும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது குறித்து விரிவான அறிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீஸுக்கு உத்தரவிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்திருந்த கூடுதல் அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா, மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கம் என்பது பிழையான தகவல் தொடர்பு என்றும், அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
முன்னதாக, பிரிஜ் பூஷணால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றம்சாட்டிய வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை உடனடியாக திரும்ப வழங்குமாறு டெல்லி நகர போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டிருந்தது. வியாழக்கிழமை மாலையில் முன்னணி மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், "நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷணுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல இருக்கும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை டெல்லி போலீஸ் திரும்பப் பெற்றுள்ளது" என்று பதிவிட்டிருந்தார். அப்பதிவில் அவர், டெல்லி போலீஸ், தேசிய மகளிர் ஆணையம், டெல்லி பெண்கள் ஆணையம் ஆகியவற்றை டேக் செய்திருந்தார்.
இதனிடையே, எக்ஸ் தளத்தில் வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல் ஆணையரின் அதிகாரபூர்வ கணக்கில விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதில், “பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக சாட்சியம் சொல்லவிருக்கும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் பெரும்பாலும் ஹரியாணாவில் வசிப்பதால், எதிர்காலத்தில் ஹரியாணா காவல் துறையை இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் பிஎஸ்ஓக்கள் இந்த முடிவை தவறாகப் புரிந்துகொண்டு அறிக்கை கொடுப்பதில் தாமதம் செய்துள்ளனர். தற்போது நிலைமை சரி செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு தொடர்கிறது” என்று கூறப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment