Published : 23 Aug 2024 04:53 PM
Last Updated : 23 Aug 2024 04:53 PM
பூனே: மகாராஷ்டிராவில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்து உள்துறை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
புனேவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், பத்லாபூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு பேசினார். அவர் கூறுகையில், "ஒரு பள்ளியில் இதுபோன்ற குற்றங்கள் நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அனைவரும் அதையேதான் வேண்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநில அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். உள்துறை அமைச்சகமும் தேவைப்படும் இடங்களில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்லாபூர் மழலையர் பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்துக்கு பின்பு, மாநிலம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. துரதிருஷ்டவசமாக மாநிலத்தில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. மக்கள் அதற்கு எதிர்வினையாற்றுக்கின்றனர். தங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றனர். சனிக்கிழமை ஒருநாள்‘பந்த்’ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்" என்று சரத் பவார் தெரிவித்தார்.
தாக்கரே எச்சரிக்கை: பத்லாபூர் மழலையர் பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் எதிர்க்கட்சிகள் வீதிகளில் இறங்கிப் போராடும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசிய உத்தவ் தாக்கரே, "ஆகஸ்ட் 24-ம் தேதி சனிக்கிழமை எதிர்க்கட்சி கூட்டணிகளான மகா விகாஸ் அகாடி ஏற்பாடு செய்துள்ள மகாராஷ்டிரா முழு அடைப்பு போராட்டத்தில் அரசியல் இல்லை. மாறாக, அது வக்கிரத்துக்கு எதிரானது. சாதி, மத, பேதங்களைக் கடந்து மக்கள் அதில் பங்கேற்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். பத்லாபூரில் இன்னும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பத்லாபூரில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வீதிகளில் இறங்கிப் பேராட்டம் நடத்த வேண்டி இருக்கும்.
மதியம் 2 மணி வரை பந்த் கடைபிடிக்கப்பட வேண்டும். அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்கும் போது மக்கள் நீதிமன்றத்தில் நீதி கேட்கப்படுகிறேது. அரசு தனது கடமையை தீவிர முயற்சியுடன் கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த பந்த்" என்று தெரிவித்தார்.
மக்கள் போராட்டம்: மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பாலியல் துன்புறுத்தலை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. குழந்தைகளின் உடல்நலன் குன்றியதால் விவரமறிந்த பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.
இதை அறிந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். பத்லாபூரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டங்களில் 17 போலீஸார், 8 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT