Published : 30 May 2018 08:12 AM
Last Updated : 30 May 2018 08:12 AM
தெலங்கானாவில் அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
தெலங்கானா மாநிலம், வாரங்கலில் இருந்து கரீம்நகருக்கு நேற்று காலை 40 பயணிகளுடன் அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் கரீம்நகர் மாவட்டம், ஹனும கொண்டூரு மண்டலம், சஞ்சர்லா என்ற இடத்தில் பஸ் மீது எதிரில் வந்த லாரி மோதியது. இந்த லாரி மற்றொரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது விபத்தை ஏற்படுத்தியது. மேலும் பஸ்ஸின் பின்னால் வந்த 2 பைக்குகள் மீதும் லாரி மோதியது.
இந்த கோர விபத்தில் பஸ் பயணிகள் 6 பேர் அதே இடத்தில் இறந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கரீம்நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மற்ற 15 பேரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து அறிந்தவுடன் தெலங்கானா நிதியமைச்சர் ஈடல ராஜேந்தர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். லாரியின் அதிக வேகமே விபத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கரீம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே விபத்தில் இறந்தவர்களுக்கு தெலங்கானா முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என்றார்.
தெலங்கானாவில் கடந்த 3 நாட்களுக்கு முன், சித்திபேட்டை பகுதியில் நடந்த பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT