Published : 22 Aug 2024 07:47 PM
Last Updated : 22 Aug 2024 07:47 PM
வார்சா: இந்தியா - போலந்து இடையே பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜம்சாஹேப் நினைவு இளைஞர் பரிமாற்றத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 20 போலந்து இளைஞர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
போலந்தின் வார்சாவில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "கடந்த 45 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் போலந்து வருவது இதுவே முதல்முறை. ஜனநாயகத்தில் இந்தியா, போலந்திடையே பகிரப்பட்ட மதிப்புகள் இரு நாடுகளையும் நெருக்கமாக்குகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆபரேஷன் கங்கை திட்டத்தின் வெற்றியில் போலந்து வாழ் இந்தியர்கள் அளித்த பங்களிப்பு மகத்தானது. இந்தியாவுக்கான சுற்றுலாவின் விளம்பரத் தூதராக இந்திய சமூகத்தினர் மாறி அதன் வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
டோப்ரி மகாராஜா, கோலாப்பூர் மற்றும் மான்டே காசினோ நினைவிடங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான, மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுகளுக்கு பிரகாசமான எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இந்த சிறப்புப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜம்சாஹேப் நினைவு இளைஞர் பரிமாற்றத் திட்டம் என்ற புதிய திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 20 போலந்து இளைஞர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்படுவார்கள்.
குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது போலந்து அரசு அளித்த உதவி மகத்தானது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் மிகப் பெரிய மாற்றம். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக நாடு மாற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை இந்தியா கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள், தூய்மையான எரிசக்தி, பசுமை வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதில் போலந்தும் இந்தியாவும் தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகின்றன.
உலகம் ஒரே குடும்பம் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. உலக நலனுக்கு பங்களிப்பு செய்வதிலும், மனிதாபிமான நெருக்கடிகளின்போது முன்னின்று செயல்படுவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT