Published : 22 Aug 2024 08:10 PM
Last Updated : 22 Aug 2024 08:10 PM

வக்ஃப் மசோதா: நாடாளுமன்ற கூட்டுக் குழு முதல் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி

புதுடெல்லி: வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை எதிர்க்கட்சி எம்பிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் பல விதிகளை, மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சகம் முன்வைத்தது.

கூட்டத்தின்போது பல காரசாரமான வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்ட நிலையிலும், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல மணி நேரம் அமர்ந்து மசோதாவின் விதிகள் மீதான தங்களின் கருத்துகளை பகிர்ந்து ஆலோசனைகளை வழங்கினர், விளக்கங்களைப் பெற்றனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுத்தீன் ஒவைசி, திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்ட இன்னும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியருக்கு அதிக அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட மசோதாவின் பல்வேறு உட்பிரிவுகள் குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சகம் சரியான முன்தயாரிப்புடன் வரவில்லை என்று சிலர் தெரிவித்தனர். இதே கருத்து பல உறுப்பினர்கள் மத்தியிலும் நிலவியது. கூட்டுக்குழுவின் அடுத்தக் கூட்டம் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும் என்று உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, வக்ஃப் (திருத்தம்) சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதால், மத்திய அரசு மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்தது. சர்ச்சைக்குரிய இந்த மசோதாவினை ஆய்வு செய்ய 31 பேர் அடங்கிய குழுவினை மக்களவை பணித்துள்ளது. முன்னதாக, நாடாளுன்ற கூட்டுக்குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பால், "குழு முஸ்லிம் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று உறுப்பினர்களுக்கு உறுதியளித்திருந்தார்.

வக்ஃப்களின் சொத்துகளை பதிவுசெய்யும் முறையை ஒரு மையப்படுத்தப்பட்ட போர்ட்டல் மூலமாக சீர்திருத்துவதை நோக்கமாக கொண்ட பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி அரசின் முதல் முன்முயற்சியே இம்மசோதாவாகும்.

கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து சென்ற முஸ்லிம்களின் நிலங்கள், சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ல் வக்பு சட்டம் இயற்றப்பட்டு, 1955-ல் அமலுக்கு வந்தது. கடந்த 1995-ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசு, அந்த சட்டத்தில் திருத்தம் செய்து, வக்பு வாரியங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. கடந்த 2013-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, திருத்தம் செய்தது. இதன்படி வக்பு வாரிய சொத்துகளுக்கு புவியியல் தகவல் முறைமை (ஜிஐஎஸ்) வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனிடையே, 2022-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் வக்பு வாரியங்களுக்கு 7.80 லட்சத்துக்கும் மேற்பட்ட அசையா சொத்துகள் உள்ளன. இதன்படி, வாரியங்களிடம் தற்போது 9.40 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி ஆகும்.

இந்நிலையில், வக்ஃபு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களை மத்திய பாஜக அரசு செய்துள்ளது. இதன்படி, இந்த வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெறலாம். ஒவ்வொரு வாரியத்திலும் 2 பெண்கள் இடம்பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. வாரிய சொத்துகள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். வக்ஃபு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x