Published : 22 Aug 2024 04:48 PM
Last Updated : 22 Aug 2024 04:48 PM

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்: போலந்து பிரதமர் நம்பிக்கை

வார்சா: பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

போலந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் வார்சாவில் அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்-கை சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்தியா - போலந்து இடையே பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமான ஒத்துழைப்பு நமது ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கையின் அடையாளம். இந்தப் பகுதியில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். புதுமை மற்றும் திறமை ஆகியவை நம் இரு நாடுகளின் இளைஞர் சக்தியின் அடையாளம். திறன்மிகு தொழிலாளர்களின் நலனுக்காக இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவும் போலந்தும் சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவதில் முன்னேற்றம் கண்டு வருகிறது. சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். சர்வதேச நிறுவனங்கள் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டிருப்பது காலத்தின் தேவையாக இருக்கிறது. எனவே, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் விரைவான சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பயங்கரவாதம் மிகப் பெரிய சவாலாக நம் முன் உள்ளது. இந்தியாவும் போலந்தும் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள். அதேபோல், பருவநிலை மாற்றம் அனைவருக்கும் பொதுவான ஒரு சவால். பசுமையான எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் இணைந்து செயல்படுவோம். 2025 ஜனவரியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை போலந்து ஏற்கும். உங்கள் ஆதரவு இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் அனைவருக்கும் கவலை அளிப்பதாக உள்ளன. எந்த ஒரு மோதலிலும் அப்பாவி உயிர்கள் பலியாவது, ஒட்டுமொத்த மனித குலத்தின் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் மிகப்பெரிய சவாலாகும். அமைதி மற்றும் ஸ்திரதன்மையை ஏற்படுத்த பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். நட்பு நாடுகளுடன் இணைந்து இதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க இந்தியா தயார்.

இந்தியா மற்றும் சமஸ்கிருதத்தின் மிகவும் பழமையான மற்றும் வளமான பாரம்பரியத்தை போலந்து கொண்டுள்ளது. இந்திய நாகரிகம் மற்றும் மொழிகள் மீதான ஆழ்ந்த ஆர்வத்தால் நமது உறவுகளின் வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நமது இரு நாட்டு மக்கள் இடையேயான ஆழமான உறவுகளின் உயிர்ப்புள்ள உதாரணத்தை நேற்று பார்த்தேன்.

கோலாப்பூர் மகாராஜாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இன்றும் போலந்து மக்கள் அவருடைய தொண்டு மற்றும் தாராள மனப்பான்மையை மதிக்கிறார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரது நினைவை அழியாத வகையில், இந்தியா மற்றும் போலந்து இடையே ஜாம் சாகேப் நவாநகர் இளைஞர் செயல் திட்டத்தை தொடங்க உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் போலந்தில் இருந்து 20 இளைஞர்கள் இந்தியாவிற்கு வருகை தருவார்கள்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அப்போது பேசிய போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், "இந்தியா - போலந்து இடையேயான உறவை வலுவான கூட்டாண்மை நிலைக்கு கொண்டு செல்ல இன்று முடிவு செய்துள்ளோம். இது வெறும் வரையறை மட்டுமல்ல, வெறும் வார்த்தையல்ல. பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான எங்கள்தீர்மானம் இதற்குப் பின்னால் உள்ளது.

மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சினைகளில் ஒரு தெளிவுபடுத்தலுடன் தொடங்கினோம். அமைதியான முறையில், சரியான முறையில், உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்தியா இன்றியமையாத மற்றும் மிகவும் ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்த அறிவிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சில மணி நேரங்களில் பிரதமர் மோடி உக்ரைனுக்குச் செல்ல உள்ளார். உங்களின் உக்ரைன் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x