Published : 22 Aug 2024 05:09 PM
Last Updated : 22 Aug 2024 05:09 PM

“மாநில அந்தஸ்தே முக்கியம்” - ஜம்மு காஷ்மீரில் காங். உடனான கூட்டணியை இறுதி செய்த ஃபரூக் அப்துல்லா தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இறுதியாகியுள்ளது என்று தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். முன்னதாக, காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் ஃபரூக், ஓமரை அவர்களின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்தப் பின்னணியில் ஃபரூக் அப்துல்லா இவ்வாறு அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஃபரூக் அப்துல்லா கூறுகையில், "சுமுகமான சூழலில் நாங்கள் ஒரு நல்ல சந்திப்பை நடத்தினோம். கூட்டணி சரியான பாதையில் உள்ளது. இறைவன் விரும்பினால் அது சீராக நடக்கும். கூட்டணி இறுதியாகியுள்ளது. இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் 90 தொகுதிகளிலும் கூட்டணி இருக்கும். சிபிஐ(எம்)-ன் தரிகாமியும் எங்களுடன் இருக்கிறார். காஷ்மீர் மக்களும் எங்களுடன் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு நாங்கள் பெருவாரியாக வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்.

மாநில அந்தஸ்து என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அது எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் துயரமான நாட்களை இந்த மாநிலம் பார்த்துள்ளது. முழு அதிகாரத்துடன் அது சரிசெய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காக நாங்கள் இண்டியா கூட்டணியுடன் இணைந்து நிற்கிறோம்" என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, இந்தத் தேர்தலில் மாநில அந்தஸ்து விவகாரத்தையே முன்னிறுத்தி வருகிறார். ஸ்ரீநகரில் காங்கிரஸ் தொண்டர்களிடம் உரையாற்றிய அவர், “ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து ​​நான் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தேன். ஜம்மு - காஷ்மீர் மக்களின் பிரதிநிதித்துவம் காங்கிரஸுக்கு மிகவும் முக்கியமானது என்று நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை வழங்க விரும்புவதால், முதலில் ஜம்மு - காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.

சுதந்திரத்துக்குப் பிறகு யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், இந்திய வரலாற்றில் ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது ஜம்மு காஷ்மீரில்தான். ஜம்மு காஷ்மீர் மக்களை நான் நேசிக்கிறேன். நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க பாடுபடுகிறேன். ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள சோகம், வேதனை மற்றும் அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரிலுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் செப்.18, 25 மற்றும் அக்.1-ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்.4-ம் தேதி நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x