Published : 22 Aug 2024 05:26 AM
Last Updated : 22 Aug 2024 05:26 AM

13 ஆண்டுக்கு முன் விடுதி மாடியில் இருந்து விழுந்து செயலிழந்து போன மகனை கருணைக்கொலை செய்யக்கோரிய மனு நிராகரிப்பு

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் மொஹாலி நகரில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர் விடுதியின் 4-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த சம்பவம் 13 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, முற்றிலுமாக செயலிழந்துபோனார். மகனை காப்பாற்றும் முயற்சியில் பெற்றோர்அவரை மருத்துவமனையில் அனுமதித்து இடைவிடாது சிகிச்சை அளித்து வருகின்றனர். எத்தகைய பேச்சும், அசைவுமின்றி படுத்தப்படுக்கையாக இருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கு ரைல்ஸ் குழாய் மூலம் மருத்துவமனையில் உணவும், மருந்தும் அளிக்கப்பட்டு வருகிறது. ரைல்ஸ் குழாய் என்பது மூக்குதுவாரம் வழியாக நேரடியாக இரைப்பைக்கு உணவும், மருந்தும் செலுத்த உதவும் மருத்துவ குழாயாகும்.

இந்த மருத்துவ முறைக்கு அதிகம் செலவாகவே கடந்த 2021-ல் தங்களுக்கு சொந்தமான வீட்டை விற்று மருத்துவ கட்டணம் செலுத்தும் நிலைக்கு பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் தள்ளப்பட்டனர். அதன் பிறகும் அவர் மீண்டுவர வாய்ப்பு மிகக்குறைவாகவே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது 30 வயதாகிறது. அவரது தாய் நிர்மலா தேவி (55), தந்தை அசோக் ராணா (62). பணி ஓய்வுபெற்ற தந்தை, வயது முதிர்ந்த தாய் என்பதால் இதற்கு மேல் தங்களது மகனை காப்பாற்ற செலவழிக்க முடியாத நிலையில் பெற்றோர் உள்ளனர். இந்நிலையில், 13 ஆண்டுகள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகும் செயலிழந்த நிலையிலேயே இருக்கும் தங்கள் மகனை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தங்களது மகனுக்கு உணவும், மருந்தும் அளிக்கப் பயன்படும் ரைல்ஸ் குழாயை அகற்ற அனுமதிக்கும்படி மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர்அடங்கிய அமர்வு கூறியதாவது:

ரைல்ஸ் குழாயினை அகற்றினால் நோயாளிபட்டினி கிடந்து மரணிக்க நேரிடும். ஆகையால் ரைல்ஸ் குழாய் அகற்றுதல் கருணைக்கொலையாகக் கருதப்படமாட்டாது. செயற்கைசுவாசக் குழாய் மூலமாக மட்டுமே நெடுங்காலமாக உயிர் காப்பாற்றப்பட்டு வரும் நிலையில் இருப்பவர்களுக்குத்தான் கருணைக்கொலை அனுமதிக்கப்படுகிறது. ரைல்ஸ் குழாய் என்பது செயற்கை சுவாசக்குழாய் அல்ல. இந்த காரணத்தினால்தான் டெல்லி உயர் நீதிமன்றம் உங்கள் மனுவை நிராகரித்தது. அதேநேரத்தில், 13 ஆண்டுகள் கடந்தும், தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்த பின்பும் மகனை மீட்க முடியாமல் திண்டாடும் பெற்றோரின் அவல நிலை குறித்து இந்த நீதிமன்றம் கவலை கொள்கிறது. ஆகவே பாதிக்கப்பட்டவரை பராமரிக்க கூடிய நிறுவனத்தைக் கண்டறிந்து தேவையான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்யும்படி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவ்வாறு நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x