Published : 21 Aug 2024 06:23 AM
Last Updated : 21 Aug 2024 06:23 AM

மத்திய அரசில் உயர் அதிகாரிகள் நேரடி நியமன முறை நேரு காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும் நேரடி நியமன முறை (லேட்டரல் என்ட்ரி) என்பது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

மத்திய அரசு, கடந்த 18-ம் தேதி,10 இணை செயலாளர்கள் மற்றும்35 இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் என 45 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமன முறை (லேட்டரில் என்ட்ரி)மூலமாக பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த முடிவை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

ஆனால் இந்த நேரடி நியமன நடைமுறை என்பது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

1959-ம் ஆண்டில், நேரடி நியமன முறையின் கீழ் மன்தோஷ் சோதி என்பவரை கனரகத் தொழில்துறை செயலராக அப்போதைய பிரதமர் நேரு நியமித்தார். அதேபோல், வி. கிருஷ்ணமூர்த்தி பிஎச்இஎல், செயில் நிறுவனங்களுக்குத் தலைமை வகித்தார். அதுமட்டுமல்லாமல் மின்துறை, கனரகத் தொழில்துறை, வேதியல் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆகிய 3 துறைக்கும் டி.வி. கபூர் என்பவர் நேரடி நியமன முறை மூலம் நியமிக்கப்பட்டார்.

இதேபோல் ஐ.ஜி. படேல், 1954-ம் ஆண்டில் நாட்டின் துணை பொருளாதார ஆலோசகராக, சர்வதேச செலாவணி நிதியத்திலிருந்து (ஐஎம்எஃப்) நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர், ரிசர்வ் வங்கி கவர்னர் போன்ற பதவிகளையும் வகித்தார்.

நேரடி நியமன முறையின் கீழ்1971-ல், முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங், வணிகத்துறையில் பொருளாதார ஆலோசகராக சேர்ந்தார். ஜனதா கட்சி ஆட்சி செய்தபோது, ரயில்வே இன்ஜினீயராக இருந்த எம். மெனேசஸ் என்பவரை, மத்திய பாதுகாப்புத் தயாரிப்புத்துறை செயலராக நியமித்தனர்.

முன்னாள் பிரமதர் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தின்போது கேரள எலக்ட்ரானிக்ஸ் வளர்ச்சிக் கழகத் தலைவராக இருந்த கே.பி.பி. நம்பியார், மத்திய எலக்ட்ரானிக்ஸ் துறை செயலராக நியமிக்கப்பட்டார். அதேபோல் சாம் பிட்ரோ, சி-டாட் (சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் ஆஃப் டெலிமேட்டிக்ஸ்) தலைவராக நியமிக்கப்பட்டார்.

2002-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின்போது தனியார் துறையில் பணியாற்றி வந்த ஆர்.வி. ஷாஹி, மின்துறை செயலராக பணியமர்த்தப்பட்டார்.

அதேபோல் 1980, 1990-களில் அலுவாலியா உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நிபுணர்கள் தனியார் துறையில் இருந்து நேரடிய மத்திய அரசின் செயலர் போன்ற உயர்பொறுப்புகளில் அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் 2018-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஆட்சியில், மத்திய அரசின் உயர் பொறுப்புகளில் நேரடி நியமன முறையில் நிபுணர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரவை செயலர் கே.எம்.சந்திரசேகர் கூறும்போது, “மத்திய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை எதிர்ப்பவன் நான். தற்போதுள்ள மத்திய அரசு பொதுப்பணியாளர் தேர் வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் மிகச்சிறந்த நிபுணர்களை நாம் நியமிக்க முடியும். கூர்மையான சிந்தனை கொண்ட திறமையான இளைஞர்கள் நமது நாட்டில் நிரம்பியுள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x