Published : 20 Aug 2024 05:19 PM
Last Updated : 20 Aug 2024 05:19 PM

UPSC Lateral Entry | “மத்திய அரசின் யு-டர்னுக்கு எதிர்க்கட்சிகளே காரணம்” - காங்கிரஸ்

கோப்புப்படம்

புதுடெல்லி: மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரின் விமர்சனத்தால் மத்திய அரசு நேரடி நியமன அறிவிப்பைத் திரும்பப் பெற்றுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கடும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில், மத்திய அரசின் சமீபத்திய நேரடி நியமன அறிவிப்பை ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சுடானுக்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் பகிர்ந்து, காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் ஆட்சியின் கீழ் உள்ள மத்திய அமைச்சர், அரசியல் சாசன அதிகாரி ஒருவருக்கு தேதி குறிப்பிடாமல் எழுதியிருக்கும் கடிதம். என்னவொரு பரிதாபமான ஆட்சி. இருந்தாலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களின் எதிர்வினையால் விளைந்த விளைவு இது என்பது தெளிவு" என்று தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை காங். பாதுகாக்கும் - ராகுல்: மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எந்தச் சூழ்நிலையிலும் அரசியலமைப்பையும், இடஒதுக்கீட்டு முறையையும் காங்கிரஸ் பாதுகாக்கும். பாஜகவின் நேரடி நியமன முறை போன்ற சதிகளை எப்பாடுபட்டாவது முறியடிப்போம். நான் மீண்டும் கூறுகிறேன், 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்ச வரம்பை உடைத்து, சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை உறுதி செய்வோம். ஜெய் ஹிந்த்" என்று தெரிவித்துள்ளார்.

விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை கொறடாவுமான மாணிக்கம் தாகூர், “2024 நமக்கு இரண்டு விஷயங்களைக் கொடுத்துள்ளது. ஒரு பலவீனமான பிரதமர், வலிமையான மக்கள் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர். இறுதியில் இது நமது அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “இடஒதுக்கீட்டை நிராகரித்து யுபிஎஸ்சி மூலமாக நேரடி நியமனம் வழியாக பின்கதவு மூலம் நுழைய சதி செய்யப்பட்டது. இப்போது, பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினரின் ஒற்றுமைக்கு முன் மத்திய அரசு அடிபணிந்துள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் நன்றி தெரிவித்துள்ளார். “நேரடி நியமன விவகாரம் குறித்து எனது கவனத்துக்கு வந்தது முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அது குறித்து பேசி வருகிறேன். இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினரின் கவலைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். கடந்த இரண்டு நாட்களாக பிரதமரிடமும் அவர் அலுவலத்திடமும் தொடர்பில் இருந்தேன். இன்று நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக நானும், எல்ஜேபி (ராம்விலாஸ் பஸ்வான்) கட்சியும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் மீண்டும் சமூகத்தின் நம்பிக்கையை வென்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, யுபிஎஸ்சி ஆகஸ்ட் 17-ம் தேதி 10 இணை செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் என 45 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் (Lateral entry) மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அரசுத் துறைகளில் சிறப்பு நிபுணர்களை (தனியார் நிறுவனங்களில் இருந்தும்) நியமிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினர்களுக்கான இடஒதுக்கீடு உரிமையினை குறைத்து மதிப்பீடுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.

மேலும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருப்பவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் திங்கள்கிழமை, இட ஒதுக்கீடு நடைமுறைகளை பின்பற்றாமல் அரசு பணிகளில் நியமனம் மேற்கொள்வது குறித்து கவலை தெரிவித்தார். அதேபோல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அரசின் இந்தத் திட்டம், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், ஆதிவாசிகள் மீதான நேரடியான தாக்குதல் என்று சாடியிருந்தார். மேலும் சாமானியர்களிடமிருந்து இடஒதுக்கீட்டை பாஜக பறிக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

காங்கிரஸ் கட்சித் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "காங்கிரஸ் தலைமையிலான அரசு, தேவைகளின் அடிப்படையில் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு நிபுணர்கள், வல்லுநர்களை பணியமர்த்த நேரடி நியமன முறையைக் கொண்டு வந்தாலும், மோடி அரசு பட்டியல் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினரின் உரிமைகளைப் பறிக்க வழிவகை செய்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon