Published : 20 Aug 2024 03:24 PM
Last Updated : 20 Aug 2024 03:24 PM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன (Lateral entry) அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்யுமாறு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய (யுபிஎஸ்சி) தலைவருக்கு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, சனிக்கிழமை அன்று மத்திய அரசு, 10 இணை செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் என 45 பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நேரடி நியமனம் (Lateral entry) மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அரசுத் துறைகளில் சிறப்பு நிபுணர்களை (தனியார் நிறுவனங்களில் இருந்தும்) நியமிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டது. இந்த விளம்பரத்தை நிறுத்திவைக்குமாறு மத்திய அமைச்சர் தற்போது யுபிஎஸ்சி தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் தனது கடிதத்தில், "கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்ட பெரும்பாலான பதவிகள் தற்காலிகமானவையே. இவற்றில் அனுகூலமானவை என்று சொல்லப்படும் விஷயங்கள் உட்பட எங்கள் அரசின் முயற்சிகள் அனைத்தும் நிறுவனங்களின் தேவையின் அடிப்படையிலானது. வெளிப்படையானது.
நேரடி நியமன செயல்முறையானது அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள சமத்துவம், சமூக நீதி, அதிலும் குறிப்பாக இடஒதுக்கீடு விதிகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நமது பிரதமர் உறுதியாக நம்புகிறார். நேரடி நியமன முறை என்ற கருத்தாக்கம் இரண்டாவது ஏஆர்சி-யால் அஙகீகரிக்கப்பட்டது. பின்பு கடந்த 2013-ம் ஆண்டு ஆறாவது ஊதியக் குழுவால் ஆதரிக்கப்பட்டது. அதன் செயல்முறை வரலாற்று ரீதியில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை கொண்டிருக்கவில்லை.
பிரதமர் மோடியைப் பொறுத்தவரையில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது நமது சமூக அமைப்பில் ஒரு மூலக்கல் போன்றதாகும். அது வரலாற்று அநீதியை போக்குவதுடன் அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவிக்கிறது. சமூக நீதிக்கான அரசியலமைப்பு ஆணையை நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இதனால் விளிம்பு நிலைச் சமூகங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் அரசுப் பணிகளில் தங்களின் பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
வலுத்த எதிர்ப்பு: பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருப்பவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் திங்கள்கிழமை, இட ஒதுக்கீடு நடைமுறைகளை பின்பற்றாமல் அரசு பணிகளில் நியமனம் மேற்கொள்வது குறித்து கவலை தெரிவித்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அரசின் இந்தத் திட்டம், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், ஆதிவாசிகள் மீதான நேரடியான தாக்குதல் என்று சாடியிருந்தார்.
இதனிடையே, லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நியாயமான, சமத்துவமான முறையில் பதவி உயர்வு வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதிசெய்திட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். வாசிக்க > சமூக நீதி மீதான மத்திய அரசின் தாக்குதலே ‘லேட்டரல் என்ட்ரி’ - முதல்வர் ஸ்டாலின் காட்டம்
அதேபோல், “மத்திய அரசின் உயர் பதவிகளில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை நேரடியாக நியமிக்கும் முறையில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அதனால், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு இந்த பதவிகள் கிடைக்காத நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே பல்வேறு நிலையிலான பணிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளும் பாதிக்கப்படும்.
சமூக நீதிக்கு எதிரான எந்த முடிவாக இருந்தாலும், அதை எந்த அரசு எடுத்திருந்தாலும் அதை ரத்து செய்வது தான் சமூக நீதி அரசுக்கு அழகாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு சமூக நீதியில் அக்கறை இருந்தால், நேரடி நியமன முறையை கைவிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடி நியமன முறை: அரசுப் பணிகளில் நேரடி நியமன முறை என்பது, மத்திய அரசுப் பணிகளில் மத்திய மற்றும் மூத்த நிலையிலான சில பதவிகளுக்கு, இந்திய ஆட்சிப் பணி போன்ற பாரம்பரிய அரசுப் பணியாளர்களில் இருந்து இல்லாமல் வெளியில் இருந்து தனியாக ஆட்களைச் சேர்க்கும் முறையைக் குறிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT