Published : 20 Aug 2024 06:26 AM
Last Updated : 20 Aug 2024 06:26 AM
வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சொந்தங்களையம், உடைமைகளையும் பறிகொடுத்து நிர்கதியானவர்களுக்கு சோதனை மேல் சோதனையாக கேரள மாநில அரசு வழங்கிய நிவாரணத் தொகையை கேரள கிராமின் வங்கி மாதாந்திர தவணைக்காக பிடித்தம் செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இதனை நம்பியிருந்த பல குடும்பங்கள் தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளன.
கடந்த ஜூலை மாதம் 30-ம்தேதி வயநாடு பகுதியில் பயங்கரநிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தநிலையில், 100-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இந்த பேரழிவிலிருந்து தப்பியவர்களுக்கு மாநில அரசு சார்பில் அவசர உதவித் தொகையாக ரூ.10,000 அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நிவாரணத்தை கேரள கிராமின் வங்கி பயனாளிகளின் கைகளில் கொண்டு சேர்க்காமல் அவர்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகைக்கு பதிலாக கழித்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிவாரணத் தொகை தங்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டவுடன் ரூ.5,000 வரை கடனுக்கான இஎம்ஐ-க்காக கழிக்கப்பட் டுள்ளதாக பாதிக்கப்பட்ட பலர் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவில் வீட்டை இழந்துவிட்டு நிவாரண முகாமில் தங்கியுள்ள சூரல்மலையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கூறுகையில், “பால்பண்ணை தொழில் செய்துவந்தேன். நிலச்சரிவில் என் மாட்டுக்கொட்டகை மற்றும் எட்டுமாடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இப்போதுஎன்னிடம் எதுவும் இல்லை. எனவே, வீட்டை வாடகைக்கு எடுத்துதங்குவதற்கு முன்பணமாக வழங்குவதற்காக நிவாரணத் தொகைையைத்தான் நம்பியிருந்தேன். ஆனால், இஎம்ஐ கட்டவில்லை எனக்கூறி என் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துவிட்டனர். இது,வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது’’ என்றார்.
வங்கியின் இந்த நடவடிக்கை மிக கொடூரமானது என மாநில கூட்டுறவு அமைச்சர் வி.என்.வாசவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (எஸ்எல்பிசி) நிவாரணத் தொகை தொடர்பாக முறையான உத்தரவை பிறப்பிக்காவிட்டாலும், வங்கி கிளை மேலாளர் தனது சொந்தப் பொறுப்பில்மனிதாபிமான முறையில் இந்தப்பிரச்சினையை அணுகியிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. இது நிச்சயம் அநாகரீகமான செயல். இந்த விவகாரத்துக்கு தீர்வு காண எஸ்எல்பிசி-யிடம் அறிவுறுத்துவேன்’’ என்றார்.
இந்நிலையில், எஸ்எல்பிசி-யின் பொது மேலாளர் கே.எஸ். பிரதீப் கூறும்போது, “ஏற்கெனவே கிராமின் வங்கியின் தலைவரை தொடர்பு கொண்டு பேசப்பட்டது. பேரழிவுக்கு முன்னர் வழங்கப்பட்ட கணக்குகளில் இருந்த நிலையான அறிவுறுத்தலின்படிதான் நிவா ராணத் தொகை பிடித்தம் செய்யப் பட்டுள்ளது’’ என்றார்.
இதற்கிடையில், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படும் வயநாடு துணைஆட்சியர், அரசு வழங்கிய நிவாரணத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திரும்ப வழங்க கிராமின்வங்கிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். கிராமின் வங்கியில் மத்திய அரசு நேரடியாக 50 சதவீத பங்குகளும், கனரா வங்கி 35%, கேரள அரசுக்கு 15% பங்குகளும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...