Published : 20 Aug 2024 08:00 AM
Last Updated : 20 Aug 2024 08:00 AM

ரஷ்யாவுடனான போருக்குப் பின்னர் முதல்முறையாக உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர் உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக செல்லவுள்ளார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார்.

மூன்றாவது முறையாக பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைந்த பின்னர் பிரதமர் மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாதம் ரஷ்யா சென்றார். 3-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் அந்தப் பயணம் சர்வதேச கவனம் பெற்றது.

ரஷ்யாவில் பிரதமருக்கு ரஷ்யாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்டில் விருதினை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்வழங்கினார். அப்போது இருவரும் கட்டியணைத்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்திருந்தார். மேலும், பிரதமர் மோடியின் ரஷ்யப்பயணம், ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சலசலப்புகளை கிளப்பியிருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்ததகவல் நேற்று வெளியாகியுள்ளது. ஆனால் அவரது பயணத் தேதிவிவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை. உக்ரைன் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார்.

பேச்சு வார்த்தையில் தீர்வு: ரஷ்யா, உக்ரைன் போர் விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதேநேரத்தில், நேரடியாக ரஷ்யாவின் தாக்குதலை இந்தியா இதுவரை விமர்சிக்கவில்லை.

முன்னதாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x