Published : 20 Aug 2024 05:21 AM
Last Updated : 20 Aug 2024 05:21 AM

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீசிட்டியில் ரூ.1,213 கோடிக்கு 7 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

ஸ்ரீசிட்டியில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்களுடன் ஆந்திர அரசு நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் பங்கேற்று 7 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருப்பதி: ஆந்திராவில் தொழில் தொடங்க திருப்பதி மாவட்டம் ஸ்ரீசிட்டியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் 7 புதிய நிறுவனங்களுடன் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.1,213 கோடியில் தொடங்கப்பட உள்ள இந்த தொழிற்சாலைகள் மூலம் 2,740 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி மாவட்டம், ஸ்ரீசிட்டியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 7 புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஸ்ரீசிட்டியில் தீயணைப்பு படை அலுவலகத்தை திறந்து வைத்ததோடு, புதிய போலீஸ் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, பல நிறுவனங்களின் சிஇஓக்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் பேசியதாவது:

விரைவாக தொழில் தொடங்க நினைக்கும் நிறுவனங்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தடாவிற்கு முன் அமைந்துள்ள ஸ்ரீசிட்டியில் தங்களது முதலீடுகளை தொடங்கலாம். நிறுவனத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஆந்திர அரசு உடனடியாக செய்து கொடுக்கும். ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக், ஐடி, உணவு பதப்படுத்தும் நிறுனங்களை உடனடியாக இங்கு நிறுவலாம். ஸ்ரீசிட்டி தொழிற்சாலைகளின் மையமாக விளங்கி வருகிறது.

இங்கு 220 நிறுவனங்களை அமைக்கலாம். அதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஏற்கனவே ஸ்ரீசிட்டியில் 4.5 பில்லியன் டாலர் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 4 பில்லியன்டாலர் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இது சாதாரண விஷயம் அல்ல.

1995-ல் நான் முதன் முறையாக ஒருங்கிணைந்த ஆந்திராவிற்கு முதல்வர் ஆனேன். தற்போது 4-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ளேன். விஷன் - 2020 எனும் திட்டத்தின் மூலம் நம் நாடு முன்னேற ஹைதராபாத்தில் ஐடி நிறுவனங்கள் அமைக்க வாய்ப்புகளை அதிகமாக வழங்கினேன். ஐடி துறையில் இந்தியா உலகிலேயே முதன்மை இடத்தில் இருக்கும் என அப்போதே நான் கூறினேன். அது இப்போது உண்மையாகி உள்ளது. இவ்வாறு சந்திரபாபு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x