Last Updated : 20 Aug, 2024 05:32 AM

 

Published : 20 Aug 2024 05:32 AM
Last Updated : 20 Aug 2024 05:32 AM

மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய வழக்கில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

பெங்களூரு: க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூருநகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. அதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலத்தின் மதிப்பு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பைவிட பன்மடங்கு அதிகமாக இருந்ததால், புகார் எழுந்தது.

இந்நிலையில் சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் உள்ளிட்ட 3 பேர்,முதல்வர் சித்தராமையா தனதுஅதிகாரத்தை தவறாக பயன் படுத்தி, விலை அதிகமுள்ள இடத்தை ஒதுக்கியிருப்பதாக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர். இதனை பரிசீலித்த ஆளுநர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தார்.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்தில் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதை எதிர்த்து சித்தராமையா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘‘என் மீதான குற்றச்சாட்டுகள் மீது எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். இவ்வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகும் வரை என் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது'' என கோரினார்.

இந்த வழக்கு நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வுமுன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சித்தராமையா தரப்பின் வாதத்தை ஏற்ற நீதிபதி,‘‘மனைவிக்கு நிலம் ஒதுக்கிய வழக்கு ஆரம்ப நிலையில் இருக்கிறது. அதில் எந்த விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. இருப்பினும் சித்தராமையா மீதுஉடனடியாக நடவடிக்கை எடுக்கஇடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கின் விசாரணை 29-ம் தேதி நடைபெறும்'' எனக்கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x