Published : 19 Aug 2024 07:33 AM
Last Updated : 19 Aug 2024 07:33 AM

பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனை

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நேற்று உளவியல் சோதனை நடத்தப்பட்டது. சிபிஐ குழுவை சேர்ந்த 5 மருத்துவர்கள், சஞ்சய் ராயின் மனநிலையை பரிசோதித்தனர். அடுத்த கட்டமாக நீதிமன்ற அனுமதியுடன் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

வழக்கு விசாரணை குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: கொல்கத்தா ஆர்ஜி கர் அரசுமருத்துவமனையில் சட்டவிரோதமாக மனித உறுப்புகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதன்காரணமாக பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

கைதான சஞ்சய் ராய் எவ்விதகுற்ற உணர்வும் இல்லாமல் இருக்கிறார். அவரது மனநிலையை அறிய உளவியல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அவர் காவல் துறையை சேர்ந்தவர் கிடையாது. ஆனால் காவலர்களுக்கான குடியிருப்பில் ஏஎஸ்ஐ-க்கான வீட்டில் அவர் தங்கி உள்ளார். அந்த ஏஎஸ்ஐ-யிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

கொலைக்கு பிறகு 2 நபர்களிடம் சஞ்சய் ராய் பேசியுள்ளார். இதுதொடர்பான விவரங்களை திரட்டி வருகிறோம். ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் சந்தீப் கோஷ், கொலையை மறைக்க முயற்சி செய்திருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களில் சிலர் மீது பெண் மருத்துவரின் பெற்றோருக்கு சந்தேகம் இருக்கிறது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

கொலை நடைபெற்ற மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் எத்தனை பேர் சம்பவ இடத்தில் இருந்தனர் என்பதை கண்டறிய முடியும்.

பெண் மருத்துவர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, கருத்தரங்கு கூடத்தில் உடல் வைக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

பெண் மருத்துவரின் தந்தை கூறியதாவது: எனது மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சஞ்சய் ராய் உண்மையான குற்றவாளி கிடையாது. கொலைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருக்கிறது. ஆர்ஜி கர் மருத்துவமனையில் எனது மகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். பழிவாங்கும் நோக்கத்தோடு, 4 ஆண் மருத்துவர்களோடு எனது மகளுக்கு பணி வழங்கப்பட்டது.

கருத்தரங்கு கூடத்தில் கொலைநடைபெற்றதாக போலீஸார் கூறுகின்றனர். இதை நம்ப முடியவில்லை. மருத்துவமனையின்வேறு பகுதியில் எனது மகளை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் கருத்தரங்கு கூடத்தில் உடலை வைத்துள்ளனர். கொலையில் பலருக்கு தொடர்பு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

6 லட்சம் நோயாளிகள் பாதிப்பு: கொல்கத்தா பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கோரி 9-வது நாளாக மருத்துவர்கள் நேற்றுபணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும்அவசர சிகிச்சை பணிகளில் மட்டுமே மருத்துவர்கள் ஈடுபடுகின்றனர். இதர மருத்துவ பணிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இதன்காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாட்களில் மட்டும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 2,500-க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

3-வது நாளாக விசாரணை: பெண் மருத்துவர் கொலை வழக்கில் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் சந்தீப் கோஷ் மீதான சந்தேகம் வலுத்து வருகிறது.

கடந்த 9-ம் தேதி உடல் மீட்கப்பட்டது. அப்போது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம், பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தது. கண்துடைப்பு நடவடிக்கையாக சந்தீப் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் மேற்குவங்க அரசு அவரை மீண்டும் பதவியில் நியமித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் மருத்துவமனை இயக்குநர் பதவியில் இருந்து சந்தீப் கோஷை உடனடியாக நீக்க உத்தரவிட்டது. வேறு எந்த அரசு மருத்துவக் கல்லூரியிலும் அவரை இயக்குநராக நியமிக்கக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது.

இதன்பிறகு தலைமறைவாக இருந்த சந்தீபை கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் பிடித்தனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை அவரிடம் 13 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 3-வது நாளாக நேற்றும் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது செல்போன் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர் செல்போனில் யாரிடம் பேசினார், என்ன பேசினார் என்பன குறித்த விவரங்களை சிபிஐ அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x