Published : 19 Aug 2024 07:39 AM
Last Updated : 19 Aug 2024 07:39 AM
பெங்களூரு: பெங்களூருவின் நெலமங்களாவில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடமிருந்து ஸ்கூட்டர்களை பிடுங்கிய பொதுமக்கள் அவற்றை மேம்பாலத்தில் இருந்து வீசி சுக்கு நூறாக நொறுக்கிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பெங்களூரு அருகே நெலமங்களா நகரில் உள்ள மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ஸ்கூட்டர்களை ஓட்டிச் சென்று சாகசத்தில் ஈடுபட்டனர். இது, மற்ற பயணிகளிடையே அதிருப்தியையும், பயத்தையும் ஏற்படுத்தியது.
அந்த இளைஞர்களின் செயலால் ஆத்திரமடைந்த பிற வாகன ஓட்டிகள் இரண்டு ஸ்கூட்டர்களை அவர்களிடமிருந்து பிடுங்கியதுடன் அவற்றை மேம்பாலத்திலிருந்து தூக்கிப்போட்டு சுக்குநூறாக உடைத்தனர். இதையடுத்து, அந்த இளைஞர்கள் பொதுமக்களின் கைகளில் சிக்காமல் இருக்க தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவத்தை நூற்றுக் கணக்கான வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி னர். அது தற்போது வைரலாக மாறியுள்ளது.
மற்ற பயணிகளின் உயிருக்கு உலைவைக்கும் இதுபோன்ற பைக் சாகச வெறி கொண்ட இளைஞர்களுக்கு இது சரியான பாடம் என்று பின்னூட்டத்தில் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், ஸ்கூட்டர்களை மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசி இளைஞர்களுக்கு பாடம் புகட்டிய வாகன ஓட்டிகளும் அடங்குவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT