Published : 19 Aug 2024 04:52 AM
Last Updated : 19 Aug 2024 04:52 AM

ஜம்மு காஷ்மீரில் பேரவைத் தேர்தல்: தால் ஏரியின் மிதக்கும் வீட்டில் அமையும் வாக்குச்சாவடிகள்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி தால் ஏரியின் மிதக்கும் வீடுகள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது சிறப்புப்பிரிவு நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர், லடாக் என்ற பெயரில் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இங்கு மக்களவைத் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

இதனிடையே, இம்மாத தொடக்கத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு வந்து ஆய்வு நடத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று பேரவைத் தேர்தலுக்கான தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வரும் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தேர்தலையொட்டி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலுக்காக தால் ஏரியின் மிதக்கும் வீடுகள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாக்குச்சாவடிகள் அமையவுள்ளன.

கோரக்பால் வாக்குச்சாவடியானது, குரேஸ் பேரவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இது பாகிஸ்தான் எல்லையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) அமையும் வாக்குச்சாவடியாகும். இந்த தொகுதியானது 100 சதவீதம் எஸ்.டி. மக்கள் வசிக்கும் தொகுதியாகும்.

இதேபோல் குப்வாரா பேரவைத் தொகுதியில் அமையும் சீமாரி வாக்குச்சாவடியானது, நாட்டின் முதல் வாக்குச்சாவடி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

மேலும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஸ்ரீநகரில் உள்ள தால்ஏரியில் மிதக்கும் படகு வீட்டில் (போட்ஹவுஸ்) ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. இந்த வாக்குச்சாவடிக்குச் செல்லும் அதிகாரிகள் ஃபெர்ரி எனப்படும் படகுகள், ஷிகாராஸ் எனப்படும் நீளமான மரப்படகுகள் மூலம் செல்வர். தால் ஏரியில் அமையும் கர் மொஹல்லா ஆபி கர்ப்போரா வாக்குச்சாவடியானது வெறும் 3 வாக்காளர்களை மட்டுமே கொண்டதாகும்.

2014-ம் ஆண்டுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2018-ம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x