Published : 19 Aug 2024 05:02 AM
Last Updated : 19 Aug 2024 05:02 AM

தமிழ் மொழியை மறந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம்: நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

திருப்பதி: ‘திரு’ மலை, ‘திரு’ப்பதி என அழகான தமிழ் பெயரை கொண்ட ஊர் திருப்பதி. இங்கு ‘திரு’ வேங்கடவன் என்று பக்தர்களால் அழைக்கப்படும், ஏழுமலையான் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 12 ஆழ்வார்களும் பாடல் பாடியதிருத்தலமாகவும், 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானதுமாய் விளங்கும் இங்கு, தற்போதைய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஏனோ தமிழை புறக்கணித்து வருகின்றனர்.

ஸ்ரீமான் ராமானுஜர் முழங்காலில் படியேறி சென்று சேவை செய்த திருவேங்கடவன் கோயிலுக்கு தினமும் தமிழ்நாட்டிலிருந்துதான் அதிகமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இதனை திருமலை திருப்பதி தேவஸ்தானமே ஒப்புக்கொள்கிறது. அதுவும், ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை ஆகிய தமிழக மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் ஏழுமலையானுக்கு நேர்ந்து, மஞ்சள் ஆடை உடுத்தி வருகின்றனர். அவர்கள் காலில் செருப்பு கூட அணியாமல் அவரவர் ஊர்களில் இருந்து நடைபயணமாக திருப்பதிக்கு வந்து, திருமலைக்கு மலையேறி சென்று, சுவாமியை தரிசனம் செய்த பின்னரே தங்களது நேர்த்தி கடனை முடிக்கின்றனர்.

தமிழகத்தில் பலருக்கு திருப்பதி ஏழுமலையான் குலதெய்வமாகவே விளங்குகிறார். அப்படி இருக்கையில், திருப்பதிக்கு வந்தால் மட்டும் தமிழர்கள் அலட்சியப் படுத்தப்படுகின்றனர் என்பதுதான் இங்கு வரும் பக்தர்களின் ஆதங்கமாக உள்ளது.

குடும்பம், குடும்பமாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மொழி தெரியாத மாநிலத்தில் இறங்கியதும், முதலில் ஏமாற்றப்படுவது தேவஸ்தானத்தால்தான். ஆம். திருப்பதி நகரின் முக்கிய இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் அனைத்து கூட்டுச் சாலைகளிலும் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடத்தில் தர்ம தரிசனம் குறித்த அறிவிப்பு பலகை தேவஸ்தானம் வைத்துள்ளது. இதில் தமிழ் அறிவிப்பைக் காணவில்லை.

இது என்ன அறிவிப்பு பலகை என கேட்டால் கூட பதில் கூற ஆள் இல்லை என்பதே உண்மை. இந்த ஓரவஞ்சனை எதற்கு? என்பதே தமிழ் பக்தர்களின் கேள்வியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒருவழியாக திருமலைக்கு சென்று விட்டால், அங்கு, தேவஸ்தான ஊழியர்கள் கூட தெலுங்கில் பேசினால் மட்டுமே சரியான பதில் கொடுக்கின்றனர் என்றும், தமிழில் பேசினால் எரிச்சலாக பதில் அளிக்கின்றனர் என்றும் 2 பக்தர்கள் அங்கலாய்க்கின்றனர்.

கடிதத்துக்கு மரியாதை இல்லை: மேலும், திருமலையில் ஓரு விசித்திரமான பழக்கம் உள்ளது. ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலங்கானாவின் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்களின் சிபாரிசு கடிதங்கள் கொண்டு வந்தால் அவர்களுக்கு திருப்பதி ஏழுமலையானின் வி.ஐ.பி தரிசனம், தங்கும் இடம் போன்றவை மிக சுலபமாக கிடைக்கின்றது.

அதுவே, அண்டை மாநிலமான தமிழக அமைச்சர்களின் கடிதம் கொண்டு வந்தால், அதனை திருமலையில் யாரும் சீண்ட கூட மாட்டார்கள். திருமலை இணை நிர்வாக அதிகாரி (ஜே.இ.ஓ) அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், தமிழக அமைச்சர்களின் சிபாரிசு கடிதங்களை வாங்க மாட்டார்கள். இந்த ஓரவஞ்சனை ஏன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிந்ததால் அந்த மாநிலத்தின் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறது என தேவஸ்தானம் கூறுகிறது. அப்படி பார்த்தால், இந்த ஆந்திர மாநிலமே தமிழகத்தில் இருந்து பிரிந்ததுதானே? அப்படி என்றால் முதல் மரியாதை தமிழுக்கும், தமிழர்களுக்கும்தானே தரவேண்டும் என்று கேட்டால், இதற்கு தேவஸ்தான அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர்.

இந்த நீண்டகால பிரச்சினையைத் தீர்க்க இனியாவது திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழுவில் இடம் பிடிக்கும் தமிழக உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என பக்தர்கள் தரப்பில் அழுத்தமான வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

இப்படி தமிழையும், தமிழ் பக்தர்களையும் புறக்கணிக்கும் தேவஸ்தானம், உண்டியலில் தமிழ் பக்தர்களின் காணிக்கையை மட்டும் புறக்கணிக்காது.

தேவஸ்தான தகவல் கொடுப்பதில் கூட ஓரவஞ்சனையை திருப்பதி தேவஸ்தானம் வெளிப்படுத்தி வருகிறது. தெலுங்கு, ஆங்கில நாளிதழ்கள், ஊடகங்களுக்கே தேவஸ்தானம் அதிக முக்கியத்துவத்தை தேவஸ்தான நிர்வாகம் அளிக்கிறது. தமிழ் சேனல்கள், பத்திரிகைகளுக்குகடைசி இடம்தான். உலக முழுவதிலும்இருந்து தினமும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் வரை திருமலைக்கு வருகை புரிகின்றனர்.

இதனால், தேவஸ்தான அதிகாரிகள் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். அனைத்து பகுதி மக்களும் திருப்பதிக்கு வருவதால், தேவஸ்தான செய்தி அனைத்து இடங்களுக்கும் சென்றடைய வேண்டும். இதில் பாரபட்சம் ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.

இனியாவது தெலுங்கு பக்தர், தமிழ் பக்தர், இவர் கன்னடம், இவர் வட இந்தியர் எனும் பாகுபாடு நீங்கி, அனைவரும் ஏழுமலையானின் பக்தர்கள் எனும் பரந்த மனப்பான்மை தேவஸ்தான அதிகாரிகளுக்கு வர வேண்டும் என்பதே பக்தர்களின் எண்ணமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x