Published : 18 Aug 2024 01:00 PM
Last Updated : 18 Aug 2024 01:00 PM

ஜெய்ப்பூர் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கும் இன்று (ஆக.18) காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலை 7 மணியளவில் மருத்துவமனைகளின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரிகளுக்கு வந்த அந்த இமெயிலில், நோயாளிகளின் படுக்கைகளின் அடியிலும், கழிப்பறைகளிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் “நீங்கள் அனைவரும் ரத்த வெள்ளத்தில் மூழ்கப் போகிறீர்கள். நீங்கள் மரணமடைய தகுதியானவர்கள். இதன் பின்னணியில் 'சிங் அண்ட் கல்டிஸ்ட்' (Ching and Cultist) என்ற பயங்கரவாத அமைப்பு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இன்னொரு மெயிலில், “மருத்துவமனை கட்டிடங்களில் நான் வெடிகுண்டுகளை வைத்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் கொல்லப்படுவீர்கள், நீங்கள் யாரும் தப்பிக்க முடியாது. நான் என் வாழ்க்கையை வெறுத்ததால் கட்டிடத்தில் வெடிகுண்டுகளை வைத்தேன். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்கள் ‘பைஜ் மற்றும் நோரா’ (Paige and Nora) அமைப்பினர்” என்று கூறப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களுடன் உடனடியாக மருத்துவமனைகளுக்கு விரைந்தனர். படுக்கைகள், அலுவலகங்கள், கழிப்பறைகள் என முழுமையாக சோதனை நடத்தி வருகின்றனர். நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதே போல நேற்று ஹரியாணா மற்றும் நவி மும்பையில் உள்ள பல்வேறு வணிக வளாகங்கள் (மால்களுக்கு) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஆனால் போலீஸ் விசாரணையில் அவை வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. அந்த வகையில் இதுவும் போலி மின்னஞ்சலா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மின்னஞ்சலை அனுப்பியவர், யார் எங்கிருந்து அனுப்பியிருக்கிறார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x