Published : 18 Aug 2024 12:40 PM
Last Updated : 18 Aug 2024 12:40 PM
கொல்கத்தா: மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்றாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய புலனாய்வு நிறுவனம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தொடர்ந்து 13 மணிநேரம் சந்தீப் குமாரிடம் விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டிய இருப்பதால் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ அவரைக் கேட்டுக்கொண்டது. ஞாயிறு முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக கேட்டுக்கொண்டது. அதன்படி அவர் மூன்றாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
இதனிடையே சந்தீப் குமார் கோஷிடம் நடந்த விசாரணையில் பெண் மருத்துவரின் மரணம் பற்றிய தகவல் கிடைத்ததும் அவர் என்ன நடவடிக்கை மேற்கொண்டார், யாரை எல்லாம் தொடர்பு கொண்டார் என்று கேட்டகப்பட்டது. மேலும் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை ஏன் மூன்று மணி நேரம் காத்திருக்க வைத்தார் என்றும் விசாரித்தனர்.
பெண் மருத்துவரின் கொலை நடந்த சில நாட்களுக்கு பின்னர் ராஜினாமா செய்த சந்தீப்பிடம், கொலை நடந்த பின்னர் அந்த செமினார் ஹாலுக்கு அருகில் உள்ள அறைகளை புதுப்பிக்க யார் உத்தரவிட்டது என்றும் விசாரித்தனர். மேலும் இந்தச் சம்பவத்தில் சதி ஏதாவது உள்ளதா என்று கண்டறிய சிபிஐ அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை செய்ய எங்களிடம் பல கேள்விகள் உள்ளன.
இந்தச் சம்பவம் ஒரு சதியா அல்லது முன் திட்டமிட்ட சம்பவமா என்று கண்டறிய நாங்கள் முயற்சிக்கிறோம். இந்தச் சம்பவத்தின் போது முன்னாள் முதல்வர் என்ன செய்தார் இந்த சம்பவத்தில் அவர் எந்த வகையிலாவது ஈடுபட்டாரா என்றும் அறிய முற்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, சந்தீப் குமார் கோஷின் பதில்களை, சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த மருத்துவர்கள், இண்டர்ன்ஷிப்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி ஒப்பிட்டு பார்க்க இருக்கிறது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீஸார் உட்பட 20 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
பயிற்சி பெண் மருத்துவர் கொலை: மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT