Published : 18 Aug 2024 09:49 AM
Last Updated : 18 Aug 2024 09:49 AM

சர்ச்சை எதிரொலி: 42 மருத்துவர்களின் டிரான்ஸ்பர் உத்தரவை திரும்பப் பெற்றது மேற்கு வங்க அரசு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 42 மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த உத்தரவை அம்மாநில சுகாதாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த 16ஆம் தேதி அன்று மேற்கு வங்கத்தில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் 42 மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்து அம்மாநில சுகாதாரத் துறை உத்தவிட்டது.

இந்த இடமாற்ற உத்தரவில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த, மருத்துவர்கள் சங்கீதா பால், சுப்ரியா தாஸ் இருவரது பெயரும் இடம்பெற்றிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த இடமாற்ற உத்தரவை கடுமையாக விமர்சித்தன.

இதனையடுத்து தற்போது இந்த பணியிடமாற்ற உத்தரவை மேற்கு வங்க சுகாதாரத்துறை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், இந்த பணியிடமாற்றம் வழக்கமான நடைமுறைதான் என்றும், பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த தினத்துக்கு முன்பே இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. எனினும் இந்த இடமாற்ற உத்தரவை திரும்பப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்தமுதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

பயிற்சி பெண் மருத்துவர் கொலையை கண்டித்தும், அதற்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி நாடு முழுவதும் நேற்று மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர். நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற 24 மணி நேர போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் சென்னையிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x