Published : 18 Aug 2024 03:45 AM
Last Updated : 18 Aug 2024 03:45 AM
புதுடெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்தும், உடனடியாக நீதி வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் நாடு முழுவதும் நேற்று மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்நிலையில் பயிற்சி பெண் மருத்துவர் கொலையை கண்டித்தும், அதற்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நாடு முழுவதும் நேற்று மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர். நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற 24 மணி நேர போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, ‘‘இவ்வழக்கை கொல்கத்தா போலீஸார் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு தடயங்கள், ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளியை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது’’ என்று குற்றம்சாட்டினர்.
இந்த போராட்டத்தால் வெளிநோயாளிகள் பிரிவு சேவை பாதிக்கப்பட்டது. மேலும் சாதாரண அறுவை சிகிச்சைகள் எதுவும் நடைபெறவில்லை. அதேவேளையில் அவசர அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) ஏற்கெனவே அறிவித்திருந்தது. மருத்துவர்கள் போராட்டத்தால் நாடு முழுவதும் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையில், டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் சங்கங்களின் சம்மேளனம், இந்திய மருத்துவர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று மத்திய சுகாதாரத் துறைஅமைச்சக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களிடம் சுகாதாரத் துறைஅமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொதுமக்கள் நலன் கருதிமருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்.நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதுகுறித்து ஆராய குழு அமைக்கப்படும். அரசு பிரதிநிதிகள், மருத்துவர்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் அந்தக் குழுவிடம் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்கலாம். மருத்துவத் துறையில் உள்ளவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு நிச்சயம் உறுதி செய்யும்’’ என்று தெரிவித்தனர்.
டெல்லியில் உள்ள குருதேக்பகதூர், ராம் மனோகர் லோகியா,டிடியு போன்ற மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவுசெயல்படவில்லை. அந்த மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல் ஜார்க்கண்ட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், பல்வேறு மருத்துவ அமைப்புகள் ஜார்க்கண்ட்டில் நேற்று எதிர்ப்பு பேரணிநடத்தின.
வடகிழக்கு பகுதியில் மிகவும் பழமையான அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னையிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சண்டிகர், பெங்களூரு போன்ற இடங்களில் உள்ளஇந்திய மருத்துவ சங்க அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பணிபுரியும் மருத்துவர்களின் வேலை சூழல், பயிற்சி மருத்துவர்களின் வாழ்க்கை நிலை போன்றவற்றில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். குறிப்பாக 36 மணி நேர ஷிப்ட் நேரத்தின் போது மருத்துவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை உறுதி செய்யவேண்டும். பணி இடங்களில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க புதிய கடுமையான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.
கரோனா வைரஸ் பரவலின் போது கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் போன்று மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்தியஅரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடித்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கொல்கத்தா பயிற்சிபெண் மருத்துவர் கொலையை கண்டித்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் நேற்றுகூறும்போது, ‘‘பயிற்சி பெண் மருத்துவர் கொலை தொடர்பாக சந்தேகப்படும் சுமார் 30 பேரை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment