Published : 18 Aug 2024 05:50 AM
Last Updated : 18 Aug 2024 05:50 AM
கொல்கத்தா: கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன என அங்கு ஆய்வு மேற்கொண்ட தேசிய பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்து வர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தேசிய பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. விரிவான விசாரணையை உறுதி செய்யதேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் டெலினா கோண்ட்குப் மற்றும் வழக்கறிஞர் சோமா சவுத்ரி ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய பெண்கள் குழு கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பெண் மருத்துவர் படு கொலை செய்யப்பட்ட இடத்துக்கு கொல்கத்தா போலீஸார் உடனடியாக சீல் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. கொலை சம்பவம் நடந்தபோது மருத்துவ மனையில் பாதுகாவலர்கள் இல்லை. இரவுப் பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை.
புதுப்பிக்கும் பணி: படுகொலை நடந்த இடத்தில் திடீரென புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது முக்கிய தடயங்களை அழிக்கும் செயல்போல் உள்ளது. மருத்துவமனையின் கழிவறைகள் மோசமாக பராமரிக்கப்பட்டுள்ளன. அங்கு போதிய வெளிச்சம் இல்லை. பாதுகாப்பு வசதிகள் சுத்தமாக இல்லை. மருத்துவமனையில் பெண் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. இவ்வாறு தேசிய பெண்கள் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT